‘மக்களால் நான்… மக்களுக்காக நான்’ : மெரினாவில் ஒலிக்கும் ஜெ.,வின் குரல்…!!! நினைவிடத்தின் முக்கிய அம்சங்கள்!!
27 January 2021, 12:00 pmசென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது நினைவுகளை போற்றும் விதமாக, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2018ம் ஆண்டு மே8ம் தேதி தொடங்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.
அவரது நினைவிடத்தின் முகப்பில் அவர் அடிக்கடி பொதுமக்கள் முன்னிலையில் பயன்படுத்தும் ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’ (BY THE PEOPLE, FOR THE PEOPLE) என்னும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
மேலும், நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.
அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், உற்சாகமூட்டும் வார்த்தைகள், சிறுகதைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கான நினைவிடத்தில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்காரப் பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தைச் சுற்றியுள்ள 9 ஏக்கர் பரப்பளவில் இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நினைவிடத்தைப் பராமரிக்க பொதுப்பணித்துறைக்கு அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவுத்திறன் பூங்கா, அருங்காட்சியகம் பின்னர் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
0
0