ஜெயலலிதாவின் சிலை அரசு சார்பில் நல்லமுறையில் பராமரிக்கப்படும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு

Author: Babu Lakshmanan
21 October 2021, 8:18 pm
jayalalitha statue - ponmudi -updatenews360
Quick Share

சென்னை : முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெயலலிதா‌ சிலையை அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்று உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ பொன்முடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை, காமராஜர்‌ சாலையிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள முன்னாள்‌ முதலமைச்சர்‌ செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின்‌ திருவுருவச்‌ சிலையினை நிறுவிட வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அரசாணை எண்‌.11, நாள்‌ 05.01.2021இன்படி, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்‌, முன்னாள்‌ முதலமைச்சர்‌ செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின்‌ திருவுருவச்‌ சிலைக்கு தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ அன்னாரது பிறந்தநாளன்று மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக முந்தைய அ.இ.அ.தி.மு.க அரசால்‌ 16.02.2021 இல்‌ தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்டத்‌ தலைவர்கள்‌, வீரர்கள்‌, தியாகிகள்‌ உள்ளிட்டவர்களின்‌ பிறந்தநாள்‌ மற்றும்‌ நினைவு நாட்களின்‌ போது மட்டுமே அரசின்‌ சார்பில்‌ மாலையணிவித்து மரியாதை செய்யப்படும்‌ நடைமுறையானது ஆண்டுடாண்டு காலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின்‌ சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின்‌ சிலைக்கும்‌ அரசின்‌ சார்பாக தினசரி மாலையிடும்‌ வழக்கம்‌ இல்லை. இனி வருங்காலங்களிலும்‌ அன்னாரின்‌ பிறந்த நாளன்று மேற்படி டாக்டர்‌ ஜெ ஜெயலலிதா வளாகத்தில்‌ (தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை மன்ற வளாகம்‌) நிறுவப்பட்டுள்ள அன்னாரின்‌ மேற்படி திருவுருவச்‌ சிலைக்கு அன்னாரின்‌ பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்‌.

மாண்புமிகு எதிர்‌ கட்சித்‌ துணைத்தலைவர்‌ திரு. ஓ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள செல்வி. ஜெ ஜெயலலிதா அவர்களின்‌ திருவுருவச்‌ சிலையினை அதிமுக சார்பில்‌ பாராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌. அன்னராது திருவுருவச்சிலை மற்றும்‌ அதனைச்‌ சுற்றியுள்ள இடம்‌ பொதுப்பணித்‌ துறையினரால்‌ சுத்தம்‌ செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும்‌, அரசின்‌ சார்பில்‌ சிலை மற்றும்‌ நினைவகங்கள்‌ யாவும்‌ பொதுப்பணித்துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலம்‌ உரிய முறையில்‌ பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆதலால்‌, இந்நேர்வில்‌ தனிநபர்கள்‌ மற்றும்‌ அமைப்புகளிடம்‌ வழங்கிடும்‌ நடைமுறையில்லாத நிலையில்‌, முன்னாள்‌ முதலமைச்சர்‌ செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின்‌ திருவுருவச்‌ சிலை அரசின்‌ சார்பில்‌ தொடர்ந்து நல்ல முறையில்‌ பராமரிக்கப்படும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 514

0

0