மதுரையில் ஜேபி நட்டா பிரச்சாரம்: அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சு தொடங்குமா?

30 January 2021, 2:36 pm
JP nadda cover - updatenews360
Quick Share

டெல்லியில் இருந்து பாஜக தலைவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டு விடும். அமித்ஷா தேசிய தலைவராக இருந்தவரை அவர் தமிழ் நாட்டுக்கு வருகிறார் என்றால், அவரை வரவேற்க தமிழக பாஜக தலைவர்கள் றெக்கை கட்டி பறக்காத குறையாக வேலை பார்ப்பார்கள்.

ஜே.பி. நட்டா, பாஜகவின் தேசியத் தலைவராக பதவியேற்ற பின்பு இந்த வேகம் தமிழகத்தில் சற்று குறைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனாலும் அமித்ஷாவுக்கு இணையாக அரசியல் களத்தில் காய்களை நகர்த்துவதில் நட்டாவும் கில்லாடிதான். அமைதியாக இருந்தே காரியம் சாதித்து விடுவார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்காத நிலையில் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக மதுரை வருவது தமிழக பாஜகவினருக்கு சுறுசுறுப்பு அளித்துள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் மதுரை வருகிறார்.

jp nadda - updatenews360

இன்று அவர் அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதெல்லாம் சம்பிரதாய நிகழ்வுகள்தான் என்றாலும் கூட பாஜக சார்பில் அன்றிரவு பாண்டிகோவில் அம்மா திடலில் அவர் பேசும் பிரமாண்ட பிரசார கூட்டம்தான் அனைவராலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்பட அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே என்றாலும்கூட, அதிமுக தலைவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கடந்த 14-ம் தேதி ஜேபி நட்டா சென்னை வந்தபோது பொங்கல் விழா உள்ளிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று விட்டு டெல்லி திரும்பிவிட்டார். இம்முறை 24 மணிநேரத்துக்கும் மேலாக அவர் மதுரையில் முகாமிடுகிறார். மதியம் நடக்கும் பாஜக மத்தியக் குழு கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அவர் தமிழக பாஜக தலைவர்களுடன் விரிவாக விவாதித்து முடிவு செய்வார் என்று தெரிகிறது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பாஜக கேட்கும் தொகுதிகள் பட்டியல் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது. அதில் 38 தொகுதிகள் அதிமுகவிடம் கேட்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் இத்தனை தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்குமா? என்பது சந்தேகம்தான். இருந்தபோதிலும் தமிழக பாஜக தலைவர்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கிறது என்பதை அறிவதற்கு நட்டா நிச்சயம் விரும்புவார்.

தமிழக பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து அவர் ஏற்கனவே கேட்டறிந்து இருக்கிறார். அதனால், அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கிய வேட்பாளர்களிடம் கருத்துக்களை கேட்டுப் பெறுவார் என்று தமிழக பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கு இன்று பிறந்தநாள்.
அதனால் நட்டாவிடம் வாழ்த்து பெறுவதற்காக அழகிரி அவரை தனிப்பட்ட முறையில் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நட்டாவை வெளிப்படையாக சந்தித்தால் தனக்கும், பாஜகவுக்கும் தர்மசங்கட சூழல் உருவாகும் என அழகிரி கருதுவதால் இந்த சந்திப்பு மிக ரகசியமாக நடைபெறலாம். ஒருவேளை, மதுரையில் நட்டாவை சந்திக்க முடியாமல் போனாலும் கூட புதுச்சேரிக்கு செல்லும் அவரை அழகிரி அங்கு நாளை சந்திப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

alagiri updatenews360

அதேநேரம், மதுரையில் நட்டாவை சந்தித்துப் பேச இன்னொரு அரசியல் கட்சியின் தலைவரும் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, டிடிவி தினகரன்தான். ஆனால் அவர் வெளிப்படையான முறையில் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

பாஜகவின் தேசியத் தலைவரை சந்தித்து பேசிவிட்டால் நிச்சயம் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்பது தினகரனின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதன்மூலம் பாஜக மேலிடத்திற்கு நான், மிக நெருக்கமாக இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள முடியும் என்றும் அவர் கருதுகிறார்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவிடம் பாஜக 60 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்பட்டது. இதன் பின்னர்தான் 38 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது. இப்போது மீண்டும் பாஜக 60 தொகுதிகளை கேட்பதாக பேசப்படுகிறது.

இப்படி தொகுதிகளின் எண்ணிக்கையை திடீரென அதிகமாக பாஜக கேட்பது பற்றி அதிமுகவுக்கு ஒரு பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுகவில் மீண்டும் சசிகலாவையும், தினகரனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே டெல்லி பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒருவேளை இவர்களை கட்சியில் சேர்க்க முடியாமல் போனால் அதற்காக வேறொரு திட்டத்தையும் பாஜகவுக்கு டிடிவி தினகரன் வகுத்துக் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, “நீங்கள் அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்குங்கள். அவர்கள் எங்களை கட்சியில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் உங்களுடன் தனியாக தொகுதி உடன்பாடு செய்துகொள்கிறோம். உங்களுக்கு எதிராக எந்த தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம். அதிமுகவிடம் இருந்து நீங்கள் 60 தொகுதிகளை வாங்கிக்கொண்டு அதில் எங்களுக்கு 22 தொகுதிகள் கொடுங்கள் போதும். இப்படி நீங்கள் தந்தால் அதிமுகவால் உங்களை எதிர்த்து எதுவும் கேட்க முடியாது. நீங்களும் தொகுதி உடன்பாடுதானே என்று சொல்லி சமாளித்து விடலாம்” என்று ஒரு நூதன யோசனையை பாஜகவிடம் தினகரன் முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

OPS EPS- updatenews360

இந்தத் தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் காதுகளில் விழுந்துள்ளது. இதனால் எந்த வகையிலும் சசிகலாவும், தினகரனும் அதிமுக கூட்டணிக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுகவின் இரு பெரும் தலைவர்களும் ரொம்பவே உஷாராக இருக்கிறார்கள்.

அதனால் இன்றைய கூட்டத்தில் அதிமுக தலைவர்கள் கலந்துகொண்டால் நிச்சயமாக இதுதொடர்பாக நட்டாவிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதேநேரம் தொகுதி பங்கீடு குறித்து இரு தரப்புக்கும் சாதாரண முறையில் பேச்சு வார்த்தை நடக்கும் என்று கருதப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகே அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

சரி, எதற்காக தனது முன்னோட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை மதுரையில் இருந்து பாஜக தொடங்குகிறது?… பொங்கல் பண்டிகையின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்க வந்தார். அன்று அவர் திமுக தலைவர் ஸ்டாலினை மதுரையில் சந்திக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

அன்று அவர்கள் சந்தித்துப் பேசி இருந்தால் மதுரையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுக முடிவுக்கு வந்திருக்கும். அதுபோன்ற ஒரு சூழலில்தான் பாஜகவும் மதுரையை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

அதாவது திமுகவும் காங்கிரசும், செய்யாததை அதிமுக- பாஜக கூட்டணி செய்து முடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மதுரையை தமிழக பாஜகவினர் தேர்ந்தெடுக்க காரணம் என்கின்றனர். பாஜக கூட்டத்தில் முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டால் நிச்சயம் அதிமுக பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிடும்.

மதுரை பிரசார கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 0

0

0