RSS கொள்கையை புகுத்தும் திமுக : கி. வீரமணி பகீர் … நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… பரிதவிக்கும் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 2:03 pm
Quick Share

ஆர்எஸ்எஸ் கொள்கையை தமிழக அரசு மறைமுகமாக செயல்படுத்துவதாக திராவிடக் கட்சியின் தலைவர் கி. வீரமணி கூறியிருப்பது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இல்லம் தேடி கல்வி

பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக, ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதற்கட்டமாக, ரூ.200 கோடி செலவில், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

Online class 1- updatenews360

தன்னார்வலர்கள் மூலமாக சுமார் 6 மாத காலம் நாள்தோறும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை திட்டம்

கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கற்பித்தல் திறன் பாதித்துள்ள மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்புகிறார். எனவே, இந்தத் திட்டத்தை இன்று மரக்காணத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

Cm stalin - updatenews360

ஆர்எஸ்எஸ் கொள்கை

இந்த நிலையில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடக் கட்சியின் தலைவர் கி.வீரமணி, ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையை மறைமுகமாக திணிப்பதாக இருப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நமது பள்ளிக் கல்வித் துறை தெரிந்தோ, தெரியாமலோ ‘பழைய கள் புதிய மொந்தை’ என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது. அதிர்ச்சியாகவும் உள்ளது.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்பது ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும்.‘‘கற்றல் – கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை-2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது. இதனை தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது சுட்டிக்காட்டத்தகுந்தது.

Veeramani Condemned - Updatenews360

‘‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க, பிளஸ் டூ படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம்” என்று கூறியிருப்பது, யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ (ஆர்.எஸ்.எஸ்.) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம்.

தலையாட்டலாமா?

அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா? ஏற்கெனவே, நவீன குலக்கல்வித் திட்டமான ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நிராகரித்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட கால அளவீடும்கூட நிர்ணயித்து, அதன் பிறகே பரிந்துரைகளை செயல்படுத்தலாம்.

கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால், இதில் அவசரக்கோலம்; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தயக்கமில்லாமல் செய்வது ஒரு தொலைநோக்கு என்றாலும், கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போன்று, மாநிலத்தின் கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலாகி விடவில்லை.

stalin - modi -updatenews360

ஆனால், பா.ஜ.க. அரசு இந்தக் கல்வித் திட்டங்கள், மருத்துவ விவசாய கூட்டுறவு சட்டங்கள்மூலம் நாளும் செய்வது யதார்த்தத்தில் மாநில உரிமைகளைப் பறித்து விடுவதாக உள்ளது! இதில் முதல் பலி, கல்வி, மருத்துவம்; எதில் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை சரித்திரம் படைத்ததோ, அதனைக் குறி வைக்கும் நிலை. எனவே, உடனடியாக இதுபற்றி தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும் உரிய அவசர நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களை – கல்வியால் அவர் களது எதிர்காலம் ஒளிமயமாக்கிட அத்துணை முயற்சி களிலும் ஈடுபடவேண்டியது அவசர அவசியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் திட்டத்தை கூட்டணி கட்சித் தலைவர் இப்படி நேரடியாக விமர்சித்திருப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே, அரசின் சில நடவடிக்கைகளை சுட்டிக் காட்டி, பாஜகவுக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த சூழலில், வீரமணியின் இந்தக் குற்றச்சாட்டு, அந்த விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Views: - 299

0

0