தர்மத்தின் பாதுகாவலர்… இயக்குநர் பேரரசுக்கு கைலாசா நாட்டின் விருது : சான்றிதழோடு விருதை அறிவித்த நித்தியானந்தா!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2022, 9:22 pm
Nithi Perarasu - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பேரரசு. இவர் அஜித், விஜய், விஜயகாந்த், அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

ஊர்களின் பெயர்களை வைத்து பேரரசு தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். கடைசியாக கடந்த 2015 -ல் சாம்ராஜ்யம் 2 என்ற படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார். இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் 6 ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் ஒதுங்கியிருந்த பேரரசு, கடந்த ஆண்டு வெளியான மின்மினி என்ற படத்தில் நடிகராக இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் பிரபல ஆன்மீகவாதியான நித்தியானந்தா, பேரரசுக்கு ‘தர்மத்தின் பாதுகாவலர்’ என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நித்யானந்தா அளித்துள்ள விருதில், ‘ஸ்ரீ கைலாசா தன்னாட்சி மாநிலம்’ என அவர் தற்போது இருக்கும் நாட்டிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறிய நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை புலனாய்வு நிறுவனங்களால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

அவர் தனது நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாக சில வீடியோக்களில் தெரிவித்திருந்தார். பேரரசுவுக்கு அளிக்கப்பட்ட விருது சான்றிதழில் கைலாச நாட்டின் தர்ம ரட்சகர் அதாவது தர்மத்தின் பாதுகாவலர் விருது, இந்து மதத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பேரரசுவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது சான்றிதழில், ‘ஜெகத் குரு மகா சன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரம சிவம்’ என்று நித்யானந்தாவின் பெயருக்கு அடைமொழிகள் இடப்பட்டுள்ளன.

Views: - 249

0

0