இந்தியா பல மொழிகளின் நாடு… இந்தி தேசிய மொழி என்பது மூடநம்பிக்கை : கமல்ஹாசன் கருத்து…!!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 1:33 pm
Quick Share

சென்னை : இந்தி தேசிய மொழி என்று Zomato ஊழியர் கூறியது பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டெலிவரி தொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக சொமோட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை அணுகியுள்ளார். அப்போது, ‘இந்தி நாட்டின் தேசிய மொழி என்றும், ஆகவே அனைவரும் இந்தி மொழி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது’ என சொமேட்டோ ஊழியர் பதிலளித்துள்ளார்.

ஊழியரின் இந்த பதில் கடும் சர்ச்சையான நிலையில், சொமேட்டோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், உடனடியாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட Zomato நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தது. மேலும், உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை புரிந்து கொண்டதாக விளக்கமும் அளித்திருந்தது. ஆனாலும், தேசிய மொழி குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பங்கிற்கு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 310

0

0