காங்கிரசில் இணைகிறாரா கமல்? நிர்வாகிகளின் கடும் எதிர்ப்பு எதிரொலி!

13 May 2021, 1:20 pm
kamal congress - cover - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி,10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வெற்றி வாய்ப்பை இழந்த கட்சிகள், அதிலிருந்து படிப்படியாக ஓரளவு மீண்டு விட்டன என்றே கூறவேண்டும். ஆனால், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தேர்தலில் கிடைத்த கசப்பான அனுபவத்தை இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவித்து வருவதை பார்க்க முடிகிறது.

குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள், 5 தொகுதிகளில் நிச்சய வெற்றி என்பதை இலக்காக வைத்து, மக்கள் நீதி மய்யம் களத்தில் இறங்கியது. ஆனால் இந்த தேர்தலில் மொத்தமே 12 லட்சம் ஓட்டுகள்தான் கிடைத்தது. இது 2.45 சதவீதம் ஆகும்.

Cbe Kamalhaasan -Updatenews360

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல் சுமார் 52 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் இன்னொரு வேட்பாளர் மகேந்திரன் சுமார் 37 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். சென்னை மதுரவாயல் தொகுதி போட்டியிட்ட பத்மபிரியாவுக்கு 33 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது.

தேர்தல் முடிந்த நிலையில் சென்னையிலும் அதன் புறநகர் தொகுதிகளிலும் போட்டியிட்ட 26 வேட்பாளர்களிடம் முதல் கட்டமாக தோல்வி குறித்து கமல் கருத்துகளை கேட்டறிந்தார். பின்பு 2-ம் கட்டமாக ஏப்ரல் 27, 28, 29, 30 என 4 நாட்களும் இணையதளத்தின் வாயிலாக வேட்பாளர்களிடம் தோல்விக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விரிவான கடிதம் அனுப்புமாறு பலரைக் கேட்டுக்கொண்டார்.

தற்போது, இணையத்தின் வாயிலாக மக்கள் நீதி மய்யத் தொண்டர்களிடம், கட்சியின் தோல்விக்கான காரணத்தை மனதில் உள்ளதை உள்ளபடி எனக்கு எழுதுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட தனக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்தத்தையும், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமலேயே அதிக வாக்குகள் கிடைத்திருப்பதை அவர் பெருமையுடன் கூறியிருக்கிறார். அதேநேரம் கோவை சிங்காநல்லூர் மற்றும் மதுரவாயில் தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகள் வாங்கி இருப்பது பற்றி அவர் கோடிட்டுக் கூட காட்டவில்லை.

KAMAL_HAASAN_UpdateNews360

தொண்டர்களிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை கேட்ட சிறிதுநேரத்திலேயே, ஏராளமானோர் தங்களுடைய மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி தள்ளிவிட்டனர்.

அவர்களில் பலர், “மக்கள் நீதி மய்யத்தின் இறுதி கட்ட பிரச்சாரம் எடுபடவே இல்லை. அதிமுக-திமுக கூட்டணிகளுக்கு மாற்று என்ற முழக்கம் இதனால் அமுங்கிப் போனது.

கட்சியின் வேட்பாளர்கள் எங்கள் ஏரியா பக்கமே வரவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கியது மிகப் பெரிய தவறு. இதனால் நமது உண்மையான பலம் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. புறநகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் கட்சிக்கு பூத் கமிட்டியே இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்டு 2 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் கூட, 234 தொகுதிகளிலும் நாம் பூத் கமிட்டி அமைக்க தவறிவிட்டோம். இதனால் வாக்காளர்களை நேரடியாக சந்திக்க முடியாமல் போய்விட்டது.

2006 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவான அலை வீசியபோதிலும், தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று விட்டார். நம்மால் அதுபோல் வெற்றி பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பணம் வாங்காமல் ஓட்டு போட்டு விடுவார்கள். ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் அப்படி அல்ல. வாக்காளர்களை சிறப்பாக கவனிக்காவிட்டால் ஓட்டுகள் விழாது என்பது கண்கூடு. இதன் காரணமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் சட்டப்பேரவைத் தேர்தலில் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. இனிவரும் தேர்தல்களில், ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்காமல் நாம் தனித்து போட்டியிட்டால், இதைவிட மோசமான தோல்விகள் கிடைக்கலாம்” என்று தொண்டர்கள் பொரிந்து தள்ளிவிட்டனர்.

Makkal neethi maiam - updatenews360

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களின் எண்ணங்கள் இவ்வாறிருக்க, கமல்ஹாசனின் சிந்தனையோ வேறு மாதிரி உள்ளது என்கின்றனர்.

கடந்த வாரம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். கோவை, திண்டுக்கல், மதுரை,சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மகேந்திரனுக்கு ஆதரவாக பல முக்கிய நிர்வாகிகள் பதவி விலகினர். தொடர்ந்து பலர் ராஜினாமா செய்தும் வருகின்றனர். அதாவது கட்சியின் கூடாரம் காலியாகி விடும் என்கிற அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. இது கமல்ஹாசனை வெகுவாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில்தான், கமல்ஹாசன் தனக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

அதற்கு அந்தத் தலைவர்கள், “ராகுல் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்கள் கட்சியை கலைத்துவிட்டு இப்போதே காங்கிரஸில் வந்து சேர்ந்தால் ராஜ்யசபா எம்பி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதெல்லாம் மேலிடம் செய்ய வேண்டிய முடிவு. அதுவும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் அதுபற்றியே யோசிப்பார்கள். எனவே ஒரு தெளிவான முடிவை உடனே எடுங்கள்” என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

Congress_Flag_UpdateNews360

இது பற்றி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கமல் மிகப் பெரிய குழப்பத்தில் உள்ளார். கட்சியை தொடர்ந்து நடத்தினால் கோடிக்கணக்கில் செலவழிக்க வேண்டி இருக்கும். தொண்டர்களே கைக்காசை போட்டு செலவு செய்வார்களா? என்பது சந்தேகம்தான். 2019 இறுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது. அடிப்படை கட்டமைப்பு வசதி கிடைத்திருக்கும் இப்போதும் நிலைமை கைமீறிப் போய் விடவில்லை. எப்படியும் இன்னும் ஒரு வருடத்திற்குள் நடத்தப்படாத பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் தனது பலத்தை நிரூபித்தால் அடுத்து வரும் தேர்தல்களை சந்திக்க அது தன்னம்பிக்கை தருவதாக அமையும். அதற்குள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் சேரலாமா? திமுக பக்கம் போகலாமா? என்றெல்லாம் குழப்பிக் கொள்வது சரியல்ல. இப்போது கமல் செய்ய வேண்டிய முதல் வேலை கட்சியை பலப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கமல் என்ன செய்யப் போகிறார்?… என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 268

0

0