பட்டியலின வேட்பாளரை மிரட்டி வேட்புமனுவை வாபஸ்பெறச் செய்த திமுக பிரமுகர் : இதுதான் நேர்மையான தேர்தலா..? கமல்ஹாசன் காட்டம்…

Author: Babu Lakshmanan
25 September 2021, 6:40 pm
kamal - stalin - updatenews360
Quick Share

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிற கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்புமனுக்களை திரும்பப் பெறச் செய்யும் செயல்களில் திமுகவினர் ஈடுபட்டு வருவதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ன வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 97,831 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இன்று காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இரு அணிகளாகவும், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்குகின்றன. எனவே, 7 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால், வாக்குகள் பிரிய அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இது ஆளும் கட்சிக்கு பாதகமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை திமுகவினர் மிரட்டி, வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினரின் இந்த செயலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டனப்பதிவில், “பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவினரின் இந்த செயலுக்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “ஊரக உள்ளாட்சி தேர்தலைக் கண்டு திமுகவினருக்கு ஒருவிதமான அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே 28 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றது. தற்போது, ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்தாலோ அல்லது கொஞ்சமான வாக்கு சதவீதத்திலோ வெற்றி பெற்றாலோ திமுகவின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும்.

இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் திமுகவினர், பிற கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெறச் செய்கின்றனர். திமுகவினரின் இந்த செயல்கள் பட்டியலின மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் வாய் பேச்சளவில் மட்டுமே பட்டியலின மக்களின் அரணாக திமுக இருக்கிறது என்று கூறுகின்றனர். உண்மையில், அவர்கள்தான் பட்டியலின மக்களின் உரிமைகளை பறிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எனவே, பட்டியலின மக்களின் வாக்குகள் கிடைக்குமா..? என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டனர்.

Views: - 155

0

0