கமலின் 3வது அணி அறிவிப்பால் திமுக கூட்டணி சிதறுமா? ஸ்டாலின் பதட்டம்!!

3 November 2020, 6:37 pm
Kamal - updatenews360
Quick Share

சென்னை: வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேராமல் மூன்றாவது அணி அமைக்கப்போவதாக நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக அணியில் இருக்கும் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்குவதில் பிரச்சினை இருப்பதைப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைத் தமது அணிக்கு இழுக்க கமல் திட்டமிடுவதால், திமுக கூட்டணி தேர்தல் நெருக்கத்தில் சிதற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் திமுக நிர்வாகிகளும் கலக்கத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டதால், திமுக கூட்டணியை அவர் காலி செய்துவிடுவாரோ என்ற பதட்டத்தில் ஸ்டாலின் இருந்தார். ஆனால், உடல்நிலை ரஜினி கட்சி தொடங்கும் வாய்ப்பு பெரிதும் மங்கிவிட்டது. அரசியல் நிலைப்பாட்டை ரசிகர்களுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பேன் என்று ரஜினி கூறியிருப்பது வழக்கம்போல் தேர்தலுக்கு முன் வாய்ஸ் கொடுப்பதற்குத்தான் என்று கருதப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து என்று கூறாமல் அரசியல் நிலைப்பாடு என்று கூறியிருப்பதால், அரசியல் கட்சியை ரஜினி தொடங்கமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால், ஸ்டாலின் சற்று நிம்மதி அடைந்தார். ஆனால், ஸ்டாலினின் நிம்மதியைக் கலைக்கும் வகையில் கமல்ஹாசனின் அறிவிப்பு வந்துள்ளது.

kamal1- updatenews360

ஏற்கனவே, திமுக 200 இடங்களில் போட்டியிடும் என்றும், கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று பல மாதங்களாக செய்திகளும் விவாதங்களும் நடந்துவரும் நிலையில், திமுக கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு 20 தொகுதிகளே ஒதுக்கப்படும் என்றும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று திமுக முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் பல மாதங்களாகவே செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் க, துரைமுருகன் ‘திமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் சில கட்சிகள் வெளியேறுவார்கள், சில கட்சிகள் உள்ளே வருவார்கள். கூட்டணியில் யார்யார் இருப்பார்கள் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்” என்று தெரிவித்தது கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. ஏற்கனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையும் குறித்து திமுகவில் இருந்து மறுப்பு எதுவும் வராத சூழலில், திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்கும் கட்சிகளும் திமுகவின் நிபந்தனைகளுக்குத் தலையாட்டும் கட்சிகளும் மட்டும் கூட்டணியில் இருக்கலாம் என்ற மிரட்டலாகவே துரைமுருகனின் கருத்து பார்க்கப்பட்டது.. அப்படி ஏற்காத கட்சிகள் கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டு தேர்தல் நேரத்தில் தெருவில் நிறுத்தப்படும் என்ற சந்தேகம் கூட்டணிக்கட்சிகளுக்கு உருவானது.

கூட்டணியில் குறைந்த இடங்கள் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் உண்மையில்லை என்று ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். திமுக கூட்டணி பற்றி ஊடகங்கள் அனுமானங்களையும், அதீத கற்பனைகளையும் வெளியிடுவதாக அவர் கூறினார். கூட்டணி வலிவோடும், பொலிவோடும் இருப்பதாகத் தெரிவித்த அவர், தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் பெயர்களைக் கூறவில்லை. மேலும், இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்ற உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

ஆனால், கூட்டணிக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்பது குறித்து அவர் மறுப்பு எதுவும் கூறவில்லை. கடைசி நேரத்தில் தொகுதி ஒதுக்கீடுப் பேச்சுகளில் திமுக கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் என்றும் கடைசி நேரத்தில் திமுக கழுத்தறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டால் என்ன செய்வது என்றும் கூட்டணித் தலைவர்கள் யோசித்துவருகிறார்கள்.

‘தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர்தான் தொகுதிகள் இறுதிசெய்வது வாடிக்கை’ என்று சொல்லி கடைசிநேரத்தில்தான் தொகுதிப்பேச்சுகள் நடைபெறும் என்பதையும் சொல்லாமல் சொன்னார். கூட்டணியில் இருக்கிறோமா, வெளியேற்றப்படுவோமா என்பதை அறிந்துகொள்ள தேர்தல் அறிவிக்கும் நேரம் வரை தற்போதுள்ள கூட்டணிக்கட்சியின் தலைவர்கள் காத்திருக்க வேண்டும் என்பதையே ஸ்டாலினின் அறிக்கை காட்டியது.

திமுகவுடன் தற்போதுள்ள கட்சிகள் அதிருப்தியில் இருப்பதால் கடைசி நேரத்தில் கமலுடன் கைகோர்க்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே கமலுக்கு நெருக்கமானவைதான். கம்யூனிஸ்ட்கள் தனது அணிக்கு வரலாம் என்று அவர் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே கூறிவிட்டார். விடுதலைச்சிறுத்தைகளும் காங்கிரசும் கமலுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்தத் தடையும் இருக்காது.

கமலுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டி அதிக இடங்களை கூட்டணிக்கட்சிகள் கேட்கும் என்று தெரிகிறது. குறைவான தொகுதிகள் கொடுத்தால் கூட்டணியைவிட்டு வெளியேறும் வாய்ப்புகளும் இருக்கின்றன. வலுவான கூட்டணியை கமல் அமைக்கும்போது திமுக தற்போது வாங்கிவரும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை அவருடைய அணி பிரிக்கும் என்பதால் திமுக தோல்வி அடையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. பத்தாண்டுகள் காத்திருந்தது மீண்டும் வீணாகிவிடுமோ என்ற பதட்டத்தில் ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Views: - 20

0

0

1 thought on “கமலின் 3வது அணி அறிவிப்பால் திமுக கூட்டணி சிதறுமா? ஸ்டாலின் பதட்டம்!!

Comments are closed.