கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் கைது எதற்காக? தமிழக அரசுக்கு சரமாரிக் கேள்வி : கெடு விதித்து எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 12:08 pm
Kaniyamoor - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி, மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த 17-ந் தேதி பள்ளியை சூறையாடினர். இதனால், பள்ளிக்கூடம் இழுத்து மூடப்பட்டது.

இந்தநிலையில், இந்த பள்ளிக்கூடத்தை திறந்து, வன்முறையால் சேதம் அடைந்ததை சரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்பை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் வற்புறுத்துகின்றனர்.

ஆனால், பள்ளிக்கூடத்தை திறக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு ஏற்பாட்டின் பேரில் 1 முதல் 8-ம் வகுப்புக்கு வரை ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் நேரடி வகுப்பு நடத்தப்படுகிறது என்று கூறினார்.

சென்னை ஐகோர்ட்டு கேள்வி மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, “இந்த விவகாரத்தில் பள்ளி தாளாளரின் மகனை சம்பந்தப்படுத்தி சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பள்ளிக்கூடத்தை சீர் செய்ய அனுமதித்தால், ஆதாரங்கள் அழிந்துவிட வாய்ப்பு உள்ளது. அதனால், தடயங்களை சேகரித்த பின்னர் பள்ளியை சீரமைக்க அனுமதி வழங்கப்படும்” என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, “பள்ளிக்கூடத்தை சீரமைக்க அனுமதி கேட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை 10 நாட்களுக்குள் பரிசீலித்து, தகுந்த உத்தரவை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார். மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து இந்த 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இது தொடர்பாக நாளை மறுநாள் விளக்கமளிக்காவிடில் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 462

0

0