தொடர்ந்து ஸ்கோர் செய்யும் கனிமொழி : உருப்படியாக யோசனை சொல்லாத ஐ-பேக் மீது கடுப்பில் ஸ்டாலின்!!

19 September 2020, 8:27 pm
kanimozhi - stalin - updatenews360
Quick Share

சென்னை: திமுக மகளிர் அணித்தலைவர் கனிமொழி பிரச்சினைகளைக் கையில் எடுத்து இந்தி எதிர்ப்பானாலும், தூத்துக்குடி தந்தை-மகன் கொலைவழக்கானாலும் ட்ரெண்ட் உருவாக்கிவரும் நிலையில். தனக்கு அதுபோல் எந்த உருப்படியான ஐடியாக்களையும் ஐ-பேக் பிரசாந்த் கிஷோர் தருவதில்லை என்று கடுப்பில் இருக்கிறாராம் திமுக தலவர் மு.க, ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் .மு. கருணாநிதி இருந்த காலத்தில் எப்போதும் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பி தன்னை மக்கள் பார்வையிலேயே வைத்திருப்பார். புதிய புதிய பிரச்சினைகளைக் கிளப்புவார். பொதுக்கூட்டங்கள் போடுவார். போராட்டங்களை அறிவிப்பார், தன்னை மையப்படுத்தி விழாக்களை நடத்துவார். திடீரென்று நீதி கேட்டு நெடும்பயணம் நடத்துவார். திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதி அரசியல் பேசுவார். ரயில் மறியல் என்பார். விமான மறியல் போராட்டம் கூட அறிவிப்பார். கருணாநிதியின் பெயர் தொடர்ந்து செய்தியின் மையத்திலேயே இருக்கும். ஒரு மாலை செய்தித்தாளையும் இரண்டு காலை செய்தித்தாள்களையும் வைத்துக்கொண்டு மக்கள் தலைவரான எம்.ஜி,ஆரை எதிர்த்து அரசியல் செய்து வந்தார். அவருக்கு ஆலோசனை சொல்ல கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து எந்த கம்பெனியையும் அவர் வைத்துக்கொண்டதில்லை. கட்சித்தலைவர்களிடமும் நிர்வாகிகளிடமும் மட்டும் விவாதிப்பார்.

ஆனால், இன்று திமுகவுக்கு ஆலோசனை வழங்க தனியாக பல கோடி கொடுத்து ஐ-பேக் என்னும் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் ஸ்டாலின். ஆனால், சமூக ஊடகங்களும் காட்சி மீடியாக்களும் பல இருக்கும் சூழலில் நாட்டில் பரபரப்பைப் பற்றவைக்கும் அளவுக்கு எந்த யோசனையையும் ஐ-பேக் ஸ்டாலினுக்குத் தரவில்லை. கட்சிக்குள் வரம்பு மீறித் தலையிடுவதாக மூத்த தலைவர்கள் பலர் வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதுதான் மிச்சம்.

கனிமொழி தானாக சிந்தித்து பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி அவற்றை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார். தூத்துக்குடியில் தந்தை-மகன் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு இறந்ததை தேசிய அளவில் கொண்டு சென்றதில் கனிமொழியின் பங்கு பெரியதாக இருந்தது, அனைவராலும் அவர் பாராட்டப்பட்டார். களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து நல்ல பெயரைத் தட்டிச்சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரி கனிமொழியிடம் இந்தி தெரியுமா என்று கேட்டதை சமூக ஊடகத்தில் ஒரு பதிவின் மூலம் விவாதப்பொருளாக்கினார். அதைத்தொடர்ந்து இந்தித் திணிப்பு பிரச்சினையை எழுப்பி அனைவரில் கவனத்தையும் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்துடன் டி-ஷர்ட்டுகளும் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகின. தொடர்ந்து பல பிரச்சினைகளில் கனிமொழி கவனத்தை ஈர்க்க கட்சித் தலவரான ஸ்டாலின் மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்ப படாத பாடுபட்டு வருகிறார்.

கோடிகளில் வாங்கிக்கொண்ட ஐ-பேக் டீம் கொடுத்த ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சியில் மக்கள் ஒன்றிணைவதற்குப் பதிலாக கொரோனா ஒன்றிணைந்தது. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது.

திமுகவில் முக்கிய அமைப்புத் தகவல்களை தலைமை நிர்வாகிகளிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் ஐ-பேக் கேட்டுவருவது முக்கிய தலைவர்களுக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது. திமுகவின் பல மட்டங்களிலும் கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஐ-பேக் தரும் தகவல்களையும் அறிக்கைகளையும் ஸ்டாலின் நம்பி அவற்றின் அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுவது முக்கிய தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. கட்சியைப்பற்றி தங்களுக்குத் தெரியாத விவரங்களை ஒரு தனியார் நிறுவனம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும். கட்சியின் தேர்தல் பிரச்சார உத்திகளை ஒரு நிறுவனம் எப்படி உருவாக்க முடியும் என்று அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஐ-பேக் நிறுவனத்தால் நல்லது எதுவும் நடக்கவில்லை. கெடுதல்தான் அதிகமாகிறது என்று திமுகவினர் கருதுகின்றனர்.

EPS - stalin - updatenews360

தொடர்ந்து பல மாவட்டகளுக்குச் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் பார்வையில் இருக்கிறார். சட்டமன்றத்திலும் ஸ்டாலினால் சோபிக்கமுடியவில்லை. ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு தடாலடியாக எதிர்க்குற்றச்சாட்டுகளைக் கூறி முதல்வரே பெயரைத் தட்டிச்சென்றார். கட்சியிலும் கனிமொழி ஸ்கோர் செய்து வருகிறார். இதனால், ஸ்டாலின் கடும் பதட்டத்திலும் ஐ-பேக் மீது எரிச்சலிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த பப்ளிசிட்டி ஐடியாவை விரைவில் தருமாறு ஸ்டாலின் கேட்டுள்ளார். அந்த யோசனையாவது உருப்படுமா. சொதப்புமா என்ற கவலையில் உடன்பிறப்புகள் ஆழ்ந்துள்ளனர்.

Views: - 9

0

0