மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லை : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதலமைச்சர் கடிதம்

3 July 2021, 5:09 pm
Edyurappa_UpdateNews360
Quick Share

பெங்களூரூ : காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டிருக்கும் மேகதாது அணை திட்டத்தினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடகா அரசு கைவிட வேண்டும் என்றும், அணை கட்டுவதற்கான பணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இது தொடர்பான நடவடிக்கையை கர்நாடகா முன்னெடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டிருக்கும் மேகதாது அணை திட்டத்தினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 136

0

0