காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு… தொண்டரின் கன்னத்தில் அறைந்த சித்தராமையா : ‘ரொம்ப கேவலம்’ – அண்ணாமலை விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
25 March 2023, 4:20 pm
Quick Share

கர்நாடகாவில் கட்சி தொண்டரின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையாவின் செயலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் கர்நாடகாவிற்கு வருகை தந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடி, ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், கர்நாடகா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் கூட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான 124 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், ஹரிஹரா தொகுதி எம்.எல்.ஏவான ராமப்பா தனக்கு இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் வலியுறுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து, அவரது தொண்டர்களுக்கு பெங்களூரூவில் உள்ள சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு ராமப்பாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது, சித்தராமையா அவர்களுக்கு அறிவுரை கூறினார். அந்த சமயம் திடீரென கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தொண்டர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பாஜகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், “பெங்களூரூவில் காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் அறைந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் செயல் மிகவும் இழிவானது.

கட்சி தொண்டனுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் நிலை என்ன என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..?, வேட்பாளர் தேர்வுக்காக இப்படி தொண்டனை அறைய வேண்டும் என்பதில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 339

0

0