தமிழகத்தை தொடர்ந்து சீண்டும் கர்நாடகா… மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடாக உள்துறை அமைச்சர் சூளுரை..!!

12 July 2021, 5:57 pm
minister bommai - updatenews360
Quick Share

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதி – தமிழக அரசியல் கட்சிகள் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் கர்நாடகா அறிவிப்பு

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. ஆனால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதேவேளையில், இந்த திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களும் மாறி மாறி தங்களின் கருத்துக்களை முன்னிறுத்தி கடிதம் எழுதினர்.

இதனிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபடி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மேகதாது அணையை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் எந்தவித தடையும் விதிக்கவில்லை. மேகதாது அணையின் கட்டுமானத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது,” என்றார்.

மேகதாது அணைக்கு எதிராக ஒவ்வொரு முறையும் தமிழக அரசியல் தலைவர்களோ அல்லது தமிழக அரசோ ஏதேனும் கருத்து தெரிவிக்கும் போது, அதனை துச்சம் செய்வது போல, கர்நாடகா ஆட்சியாளர்களின் இதுபோன்ற பேச்சுக்கள் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Views: - 102

0

0