கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் துணை ஜனாதிபதி.. ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு…

Author: Babu Lakshmanan
28 May 2022, 6:05 pm
Quick Share

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணை தலைவர் திறந்து வைத்தார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, இரண்டு கிரவுண்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1.70 கோடி செலவில் அதில் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் சிலையும், 12 அடி உயரத்தில் சிலைக்கான பீடமும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றியும் மெழுகுப் பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டதுடன், சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் வந்து செல்ல கற்கள் பதிக்கப்பட்ட நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிலையை திறந்து வைத்தார்.

கடந்த 1987ம் ஆண்டு அண்ணா சாலையில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் சிலையை எதிர்கட்சியினர் அகற்றினர். இதைத் தொடர்ந்து, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை அமைப்பது திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதோடு, நடிகர்கள் ரஜினி, சத்யராஜ், நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 363

0

0