கரும்பு காய்ஞ்சிருச்சு… வெல்லம் உருகிடுச்சு… புலம்பும் ரேஷன் கடை ஊழியர்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா..?

Author: Babu Lakshmanan
7 January 2022, 4:18 pm
Quick Share

கரூர் : தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வருவதால், அதனை பொதுமக்களிடம் வழங்க முடியாமல் திணறி வருவதாக ரேஷன் கடை பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, “தை ஒன்றாம் தேதி, தைப்பிறப்பு என்றதோடு, தைபிறந்தால் வழிபிறக்கும்,” என்பார்கள். இந்நிலையில், தை திருநாளை முன்னிட்டு கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு பொங்கல் தொகுப்புகளையும், ரூ. 2 ஆயிரத்து 500 பணமும் கொடுத்து கடந்த பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் தமிழர்களிடையே கொண்டாடப்பட்டது.

தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான் ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு பணம் கிடையாது என்றும், 21 வகையான பொருட்கள் மட்டும் தான் என்றதோடு, அந்த பொங்கல் இலவச தொகுப்புகள் வீடுகளுக்கு டோக்கன் மூலம் வழங்கப்பட்டு நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர் உள்ளிட்ட 7 வட்டங்களுக்குட்பட்ட நியாயவிலைக்கடைகளில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்த நியாயவிலைக்கடைகளில் வந்து இறங்கும் பொங்கல் தொகுப்புகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

கரும்பு காய்ந்த நிலையில் அதுவும் தோகையுடன் 3 அடி மட்டும் தான் உள்ளது. பரிசுத் தொகுப்பில் 18க்கு தொகுப்பிற்கு பதில் 16 மட்டுமே இருப்பதாகவும், அதிலும் வெல்லம் பாதி உருகி இருப்பதாகவும், இதை மக்களிடம் கொடுத்தால் வேறு வெல்லம் கொடுங்கள் என்று நியாயவிலைக்கடை ஊழியர்களிடமே வாக்குவாதத்தில் நாள்தோறும் ஈடுபட்டு வருவதாகவும், நியாயவிலைக்கடை ஊழியர்கள் குமுறுகின்றனர்.

இது மட்டுமில்லாமல், அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்படும் அத்தனை பொருட்களும், ஏற்கனவே எங்கேயே பேக் செய்யப்பட்டு, அவைகள் பாக்கெட்டுகளாக வருவதினால் அந்த பாக்கெட்டுகள் பல உடைந்து நொறுங்கியுள்ளது. உதாரணத்திற்கு மிளகு மூட்டைகளில் பாக்கெட்டுகள் போடப்பட்டு வருவதில் தன்மையற்ற மிளகுகளாகவும், அதில் ஒரு சில பாக்கெட்டுகள் உடைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதேபோல, கடலை பருப்பு பாக்கெட்டுகளாக ¼ கிலோ, பாசிப்பருப்பு ½ கிலோ ஆக பாக்கெட்டுகள் போடப்பட்டு, அதுவும் மூட்டைகளாக வரும் நிலையில், அந்த பாக்கெட்டுகள் உடைந்திருப்பதோடு, அதில் எடையும் குறைந்துள்ளதாகவும், ஒரு சில பாக்கெட்டுகள் காணாமல் போயுள்ளதாகவும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வரும் பொதுமக்களிடம், அதனை கொடுத்து அனுப்புவதற்குள் வாக்குவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கும் தங்களுக்கு தீர்வு காண, கூட்டுறவுத்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதோ…? என்பதை ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இது மட்டுமில்லாமல், நெய் 100 கிராம் கொண்ட தொகுப்புகள் ஒரு பெட்டிக்கு 100 டப்பாக்கள் ஆவின் நெய் தரப்பட்ட நிலையில், ஒரு சில டப்பாக்கள் அதிலும் 96 முதல் 98 வரை தான் எண்ணிக்கையில் உள்ளன. இதனை எந்த கணக்கில் யார், யாருக்கு தரவேண்டும், நியாயவிலைக்கடையில் பணியாற்றுவதால் எங்கள் சொந்த பணத்தினை போட்டா நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டுமென்று குமறுவதோடு, அவர்கள் மேல்மட்ட அளவில் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது கூடுதல் தகவல் ஆகும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பினால் தமிழக அரசோடு சேர்ந்து, ரேஷன் கடை ஊழியர்களும் படும்பாட்டை சொல்லி மாளாது என்பதே நிதர்சனமான உண்மை.

Views: - 692

0

0