‘மாணவர்கள் முன் எனக்கு அவமானமா இருக்கு’ : பள்ளி ஆசிரியர் தற்கொலை… மாணவி பாலியல் தொல்லை வழக்கில் புதிய திருப்பம்..!!

Author: Babu Lakshmanan
25 November 2021, 11:07 am
karur teacher suicide - updatenews360
Quick Share

கரூரில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளியில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கடந்த 19ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் அந்த தற்கொலை கடிதத்தில், “எனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்று சொல்வதற்கு பயமாக உள்ளது., நான் வாழ்வதற்கு ஆசை, ஆனால் செல்கிறேன். இந்த பூமியில் வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால்., நான் அனைவருக்கும் உதவி செய்து வாழ்வேன்,” என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் மற்றும் அந்த மாணவி தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சற்று முன்பு, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி பயின்ற அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் சரவணன் (42) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் தாயார், வேதியல் ஆசிரியர் தான் எனது மகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பார் என்று குற்றச்சாட்டு முன்வைத்து இருந்த நிலையில், தற்போது கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் நேற்றைய தினம் திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுபட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் துறையூர் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூரில் தற்கொலை செய்த பள்ளி மாணவியின் சாவுக்கு சரவணன் காரணமாக இருந்திருக்கலாம். கைதுக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து ஒரு டைரியை துறையூர் போலீசார் கைப்பற்றினர். அதில், மாணவியின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என மாணவர்கள் சந்தேகிப்பதுடன், கிண்டல் செய்கின்றனர். இதனால் என் மனம் உடைந்து விட்டது என எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் வெங்கமேடு போலீசாரிடம் கேட்டபோது, மாணவியின் இறப்புக்கு அந்த ஆசிரியர் காரணம் இல்லை. அவர் கண்டிப்பான ஆசிரியர் என விசாரணையின்போது மாணவர்கள் தெரிவித்தனர். ஆகவே புலன் விசாரணை தொடர்கிறது என்றனர்.

மேலும், கணித ஆசிரியர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 248

0

0

Leave a Reply