தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இ-பாஸ் முறை ரத்து : பொதுமக்கள் நிம்மதி..!
5 September 2020, 7:18 pmதிருவனந்தபுரம் : தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இ-பாஸ் முறையை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்திருப்பது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இ-பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, இனி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, விண்ணப்பித்தால் அனைவருக்கும் இ-பாஸ் என்னும் விதமாக தளர்வை அறிவித்திருந்த தமிழக அரசு, இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், கேரளாவில் இ -பாஸ் முறையை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவிற்கு வருபவர்களும், பிற மாநிலங்களுக்கு செல்பவர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், கேரள எல்லையை தாண்டிச் செல்பவர்கள், அங்குள்ள சோதனை சாவடியில் பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அப்படி சேகரிக்கப்படும் தகவல்களை, கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறகு, பயணியர் மொபைல் போனுக்கு தகவல் வந்த உடன், கேரளாவிற்கு உள்ளேயும், வெளியேவும் செல்ல அனுமதிக்கப்படுவர். இதனால், மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு, கேரளா செல்லும் பிற மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
0
0