வாரி வாரி வழங்கிய வாரியார்..!!! ஆகாயத்திலேயே தமது ஆருயிரை நீத்தவரின் நினைவு நாள் இன்று!!

7 November 2020, 1:40 pm
variyar - updatenews360
Quick Share

பக்தி இயக்கத்தில் ஒரு பெரிய குறை என்னவென்றால், அது முழுக்க முழுக்க பண்டிதர்களுக்காகவே அமைந்ததுதான்.

வேதமொழியில் வேதங்களும் உபநிஷதங்களும், சமஸ்கிருத மொழியில் இதிகாசங்களும், புராணங்களும், தமிழ் மொழியில் தேவார திருவாசகங்களும், திவ்வியப் பிரபந்தங்களும் என்று பக்தி இயக்கம் முழுவதும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக அமைந்திருந்த காலத்தில்தான் வாரியார் சுவாமிகளின் வருகை நிகழ்ந்தது.

இருபதாம் நூற்றாண்டின் பெரும்பான்மைப் பகுதி நாத்திகம் நர்த்தனமாடிய பகுதி.

வேதங்களும், உபநிஷதங்களும், இதிகாசங்களும், புராணங்களும், தேவார திருவாசகங்களும், திவ்வியப் பிரபந்தங்களும் பாமர மக்களுக்குப் புரியாததால், நாத்திகம் அந்தப் பாமர மக்களைக் குறி வைத்து இயங்கி பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்த காலம் அது.

அந்த நேரத்தில்தான், புராணங்களையும், இதிகாசங்களையும் புரியும் தமிழில் போதித்து, தேவார திருவாசகத்தைத் தேனில் நனைத்து, குழைத்து, எளிய மொழியில் சுவையாகப் பரிமாறிய சொற்பொழிவாளராக வாரியார் சுவாமிகள் வந்து சேர்ந்தார்.

அரிச்சுவடி அறியாதவர்கள் ஆன்மீகம் கற்றார்கள். எழுதத் தெரியாதவர்கள் இறையருளில் மூழ்கினார்கள். படிக்கத் தெரியாதவர்கள் பகவானை நெருங்கினார்கள்.

“பகவான் படித்தவர்களுக்கு மாத்திரம் அல்ல; பாமரர்களுக்கும் கூடத்தான்” என்று பரவசம் அடைந்தார்கள்.

இந்தப் புரட்சியைப் பூக்க வைத்தவர் வாரியார்.
இந்தப் புதுமையைப் புரிய வைத்தவர் வாரியார்.
இந்த பக்தி இயக்கத்திற்குப் பளிங்குப் பாதை அமைத்தவர் வாரியார்.

வாரியார், மக்கள் மொழியில் பேசினார். மக்களின் பார்வையில் இருந்து மகேஸ்வரனை விளக்கினார். பாமர மக்கள் மனதிலே பகவானைப் பதித்து விட்டார்.

நாத்திகம் நடுங்கியது –
நாத்திகம் அடங்கியது – இறுதியில்
நாத்திகம் ஒடுங்கி ஓய்ந்தே போனது.

வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் விளைந்த கடவுளின் கனிதான் வாரியார் சுவாமிகள்.

1906ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ம் தேதி அவதரித்த வாரியார் தனது எண்பத்து ஏழாம் வயது வரை, பக்தியைப் பரப்புவதிலேயே வாழ்வு முழுவதும் பாடுபட்டார்.

அவரது எளிமையான சொற்பொழிவால், படிக்காத ஏழை மக்கள் பக்தி என்பது பங்களாவாசிகளுக்கு அல்ல, உயர்ஜாதியின் உரிமைப் பொருள் அல்ல; படித்தவர்களின் பாக்கெட்டில் பதுங்குவது அல்ல, நம் போன்ற நடுத்தரங்கள், ஏழைகள், நாக்கிலே குடியிருக்கும் நல்வழிதான் பக்தி என்கிற பவித்திர உண்மையை ஏழையருக்கு எடுத்துக் காட்டியவர் வாரியார் சுவாமிகள்.

ஊர் ஊராகச் சுற்றினார் –
உலகம் முழுவதும் சுற்றினார் –
உண்மையைப் போதித்தார் –
உள்ளத்தில் பதியுமாறு போதித்தார் –

அறியாதவர்களின் நெஞ்சிலே ஆலயம் கட்டினார் –
குழப்பவாதிகள் நெஞ்சையே கோயில் ஆக்கினார் –
முட்டாள்களின் நெஞ்சையே மூலஸ்தானம் ஆக்கினார் –

பக்தியைப் பரப்பினார் –
பக்தியை மலர்த்தினார் –
பக்தியைப் புகட்டினார்.

அவருக்கு வேதம், சாஸ்திரம், தேவார திருவாசகம், திருப்புகழ் எல்லாம் அத்துபடி. ஆனால் அவற்றை அப்படியே மக்களிடம் கொடுக்காமல்,

தேவாரத்தைத் தேனில் நனைத்தார் –
பகவத் கீதையை பாலில் தோய்த்தார் –
திருவாசகத்தைத் திணைமாவில் புரட்டினார்.

எளிமையும் இனிமையும் சேர்ந்த இறைவன் மொழியான இளமைத் தமிழ் மொழியில் எல்லாவற்றையும் ஏழை மக்களின் வாயில் புகட்டினார்.

அவ்வளவுதான் –

ஆலயங்கள், அரும்பிப் பூத்தன
கோயில்கள் கொண்டாட்டம் கண்டன
உபன்யாசங்கள் – உண்மை பக்தர்களை உருவாக்கி மகிழ்ந்தன.

பக்தி என்பது பாமரர்கள் சொத்தாக பவித்திரம் பெற்றது.
வழிபாடு என்பது வறியவர்களுக்கும் வழக்கமாக ஆகிப் போனது.
ஆன்மீகம் என்பது அடிமை மக்களின் ஆதரவு இயக்கமாய் அவதாரம் கண்டது.

புரியாமல் இருந்த புண்ணியக் கதைகள் எல்லாம் புரியும்படி அவரால் போதிக்கப் பட்டது.

சுற்றிச் சுற்றி வந்து,
சொல்லிச் சொல்லிக் கொடுத்து
சூட்சுமக் கடவுளை சோற்றுக்கு இல்லாதவர்களின் சொத்தாக மாற்றிக் காட்டினார்.

வாரியார் சுவாமிகள்,
வாலிபப் பருவம் தொடங்கி
வயதான முதுமைப் பருவத்திலும், வழிபாட்டுச் செல்வத்தை வாரி வாரி வழங்கினார்.

1993ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி லண்டனுக்குச் சென்று பக்தியைப் பரப்பிவிட்டு, சென்னை திரும்புகையில் விமானப் பயணத்தின் போது, ஆகாயத்திலேயே தமது ஆருயிரை விட்டார். விண்ணில் பறக்கும் போதே தனது வேத வாழ்வை முடித்தார்.

சுடரும் வானத்திலேயே தம்
சுவாசத்தை நிறுத்திக் கொண்டார்.

இன்று அவரின் நினைவு நாள்.
ஆனால் இன்று மட்டுமல்ல; என்றென்றும் அவர் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்.

Views: - 31

0

0

1 thought on “வாரி வாரி வழங்கிய வாரியார்..!!! ஆகாயத்திலேயே தமது ஆருயிரை நீத்தவரின் நினைவு நாள் இன்று!!

Comments are closed.