வளர்ச்சி இல்லாவிட்டால் கொங்கு நாடு.. ! வானதி சீனிவாசனின் மறைமுக சொல்வது என்ன..?

20 July 2021, 11:51 am
Vanathi - kongu nadu - updatenews360
Quick Share

கொங்கு நாடு, தனி மாநில கோரிக்கை 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மிகத் தீவிரமாக இருந்தது.

கொங்குநாடும்… மிரட்சியும்

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவியேற்ற தமிழக பாஜக முன்னாள் தலைவரான எல்.முருகன் தன்னைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில், தான் தமிழ்நாட்டின் கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

திமுகவினர், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு பதிலடியாகத்தான் இப்படி அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்றும் பேசப்பட்டது.

ஆதரவும், எதிர்ப்பும்

ஊடகங்கள் சிலவற்றில் தமிழகம் கொங்குநாடு, வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என மூன்றாகப் பிரிக்கப் படலாம் என்று தகவல்களும் வெளியாகின. இதனால் கொங்கு நாடு தனி மாநில ஆதரவு, எதிர்ப்பு என்கிற விவாதங்கள் எழத் தொடங்கின.

அதேநேரம், தனி மாநிலக் கோரிக்கை என்பதை சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளாமல் பிரிவினைவாதம் பேசக்கூடாது என்று விமர்சித்ததால், அது தொடர்பாகவும் சர்ச்சைகள் வெடித்தன.

Kongunadu Memes - Updatenews360

பிரிவினைவாதம் என்பது நாட்டில் இருந்து நாங்கள் தனியாகப் பிரிந்து செல்கிறோம், என்று மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது, அதற்காக ஆயுதம் ஏந்துவது போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது ஆகும். இதை எந்தவொரு நாட்டின் குடிமக்களும் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் இது நாட்டை துண்டாடும் விஷயம்.

ஆனால் தனி மாநில கோரிக்கை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிர்வாக சீர்திருத்ததிற்காக, மத்திய அரசின் ஒப்புதலுடன் ஒரு மாநிலத்தில் இருந்து பிரிந்து செல்வதாகும். இது நமது அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.

இப்படி விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருந்த நேரத்தில் கடந்த வாரம் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் முருகன், தனது சுய விவரக் குறிப்பில் தெரிவித்த கொங்கு நாடு என்பது தட்டச்சு பிழையால் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பிறகும் கூட கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை கொங்கு மண்டலப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, என்றே சொல்லவேண்டும்.

கொங்கு மாவட்டங்கள் புறக்கணிப்பு

தமிழகத்தில் 10 மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திண்டுக்கல் ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கிய கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க தற்போது கோரிக்கைகள் தீவிரமாக எழுந்துள்ளன.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோரிக்கை கொங்கு மண்டலப் பகுதி மக்களால் பேசப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தில் 40 சதவீத பங்களிப்பை கொண்டிருந்த போதிலும்,
கொங்கு நாடு பகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி உரிமைகள் கோரப்படுகின்றன.

kongu nadu- updatenews360

இப்பகுதியில் இயங்கும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்கு தேச மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இதனால் கொங்கு நாடு தனி மாநிலம் பற்றிய விவாதங்கள் இன்னும் தணியவில்லை. அது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணம், தேர்தலுக்கு பின் கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் உச்சம் பெற்றபோது கோவை,சேலம், திருப்பூர், நாமக்கல் போன்ற மாவட்ட மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயினர். அரசு மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக 100க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது போதிய அளவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தங்கள் பகுதிக்கு வினியோகம் செய்யப்படவில்லை என்ற பெரும் மனவேதனை கொங்கு மண்டல பகுதி மக்களிடம் இன்னும் உள்ளது.

அதுமட்டுமன்றி, சென்னைக்கு இணையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டல மக்களுக்கு, தடுப்பூசிகள் சரிவர ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்கிற நியாயமான ஆதங்கமும் அவர்களிடம் உள்ளது.

தமிழக அரசுக்கு எச்சரிக்கை

இந்த இரு விஷயங்கள் தொடர்பாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் திமுக அரசுக்கு சுட்டிக் காண்பித்தார்.

கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை குறித்து அவர் கூறும்போது, “தமிழகத்தை தனியாக பிரிக்கவேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு கிடையாது. அதேநேரம் கொங்குப் பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. வரும் நாட்களில் திமுக அரசு எப்படி செயல்படுகிறது, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறதா? என்பதைப் பொறுத்து அதனடிப்படையில் கொங்கு நாடு பரிசீலனை வரலாம்” என்று குறிப்பிட்டார்.

Vanathi_Seenivasan_UpdateNews360

அதாவது, “கொங்கு மண்டலப் பகுதிகளில் போதிய வளர்ச்சியை தமிழக அரசு ஏற்படுத்தி தராவிட்டால், நிச்சயம் கொங்குநாடு தனி மாநில கோரிக்கை தீவிரமடையும். மத்திய பாஜக அரசு அதற்கு துணை நிற்கும்” என்பதை சூசகமாக அவர் கூறியிருக்கிறார்.

தடுப்பூசி பற்றி அவர் ஒரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். “தமிழகத்தில் தடுப்பூசிக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துவதுபோல் தெரிகிறது. மத்தியஅரசு கொடுக்கிற தடுப்பூசியை ஒரு சிலர் எடுத்துக்கொண்டு போய் தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்வதாக தகவலும் வருகிறது. அதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். இந்த விஷயத்தில் மாநில அரசு மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளை தக்க முறையில் தமிழக அரசு விரைந்து மக்களுக்கு போடவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, ‘மேற்கு தமிழகம் கூட்டமைப்பு’ என்றொரு புதிய இயக்கம் திருப்பூர் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களையும் இணைத்து, 90 உறுப்பினர்களைக் கொண்ட
சட்டப்பேரவையுடன் தனி மாநிலம் அமைக்கக் கோரி போராடவும் இப்பகுதி மக்களை ஒருங்கிணைக்கவும் இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆக, கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை மெல்ல மெல்ல எழுச்சி காண தொடங்கியிருப்பது, வெளிப்படையாகவே தெரிகிறது!

Views: - 127

0

0

Leave a Reply