ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல்… CM ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பரபரப்பு புகார் ; ஆளுரை சந்தித்த கிருஷ்ணசாமி.. பரபரப்பில் தமிழகம்!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 9:35 am
Quick Share

சென்னை ; மதுபான கொள்முதல், விற்பனை, காலி அட்டைபெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், சட்டவிரோத பார்களை அறவே ஒழித்திடவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியானது சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்றது. இந்த பேரணியில் புதிய தமிழகம் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி தலைமையிலான அமமுகவினரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், எந்த காரணத்தை கொண்டும் பார்களில் மது விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது. மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் கிராமங்கள், நகரங்களில் மது விற்பனைக்கு அனுமதிக்க கூடிய நிலைமையை உடனடியாக கைவிட வேண்டும், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, சட்டவிரோதமாக இயங்கும் பார்களை மூடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்த கிருஷ்ணசாமி, மதுபான கொள்முதல், விற்பனை, காலி அட்டைபெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகள் தண்டிக்கப்படும் வரை மது கொள்முதலை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் 1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல். ஆதாரங்களுடன் புதிய தமிழகம் கட்சி வெளியீடு, விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி கோரி ஆளுநரை சந்தித்து மனு என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, திமுக ஆட்சியில் பலகோடி ரூபாய் அரங்கேறியுள்ளதாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் மீதே ஒரு லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டை கிருஷ்ணசாமி சுமத்தியிருப்பது திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 408

0

0