அரசியல் லாபத்துக்காக யார் காலிலும் விழுவீர்களா..? கட்சி தொண்டனாக இருந்தாலும் கை கழுவும் திமுக. : கிருஷ்ணசாமி ஆவேசம்

Author: Babu Lakshmanan
15 August 2023, 9:42 pm
Quick Share

தென் தமிழகத்தில் கூலிப்படைகளைக் கொண்டு மீண்டும் ஒரு சாதிய கலவரத்திற்கு தூபமிடப்படுகிறதா? என்று திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சார்ந்த 30 வயது நிரம்பிய பட்டதாரி ஆசிரியரும், அந்த கிராமத்தின் வார்டு உறுப்பினரும், திமுக கிளை பொறுப்பாளருமான தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3 மணி அளவில் அவருடைய சொந்த கிராமத்திலிருந்து 1/2கி.மீட்டர் தூரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது பெற்றோர்களும், கிராமத்தைச் சார்ந்தவர்களும் அவருடைய கொலைக்குப் பின்புலமாக இருந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கடந்த மூன்று தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய 77வது சுதந்திர தினமான இன்றும் தமிழகத்தில் முகாரி ராகம் பாடும் நிலையே உள்ளது. தீர விசாரித்ததில் அவருக்கு எவ்விதமான முன் விரோதமோ, பகையோ எவரிடத்திலும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. அக்கொலையை செய்ததாக அதே கிராமத்தைச் சார்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.

தனிப்பட்ட கொடுக்கல் – வாங்கல் அல்லது நிலத்தகராறு அல்லது வேறு எந்த விதத்திலும் கொலையுண்டவருக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் எவ்வித பகையும் இல்லாமல் இருந்தும், கூலிப்படையைக் கொண்டு சாதிய வன்மத்தோடு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த எவரையாவது கொலை செய்ய வேண்டும்; அதன் மூலமாக பதிலடிகள் நடந்துதென் தமிழகத்தில் அது ஒரு தொடர் நிகழ்வாகி கலவரங்கள் ஏற்பட வேண்டும் என்ற ஒரு திட்டமிட்ட தீய செயலின் தொடக்கமாகவே இக்கொலைச் செயலை பார்க்க வேண்டி உள்ளது.

1992-ல் தொடங்கி, 30 ஆண்டு காலமாக நிகழ்ந்து வந்த தென் தமிழக சாதிய கலவரங்கள் நாம் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மெல்ல மெல்லக் குறைந்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் உருவாகி வருகிறது. தென் தமிழகத்தில் அமைதி திரும்பி வருகின்ற காரணத்தினால் பிற மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு அளவிற்கு குறைந்து, அவரவர் பகுதியிலேயே ஏதாவது தொழில் செய்து, வருமானம் ஈட்டி குடும்பத்தை நிம்மதியாக நடத்திடும் சூழல் உருவாகி உள்ளது.

தனது கட்சியின் தொண்டர் கொலையுண்ட பிறகும் அந்த மாவட்ட மூன்று மாவட்டத்தில் மட்டும் 4 அமைச்சர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட ராஜாமணியின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறவோ, இச்சம்பவத்தைக் கண்டிக்கவோ முன்வரவில்லை. எளிய சமுதாய மக்களையும், இளைஞர்களையும் தேர்தல் நேரத்தில் கொடி கட்டுவதற்கும், கோஷம் போடுவதற்கும் கொடுத்த பணத்தை வீதி வீதியாகச் சென்று வழங்குவதற்கும் மட்டும் பயன்படுத்துவார்களே தவிர, இறந்த பிறகும் கூட மதிப்பளிக்க கூடியவர்களாக இருந்துவிடக் கூடாது என்பதில் தி-ஸ்ட்டாக்கிஸ்ட் கட்சியினர் குறியாக இருக்கிறார்கள். ராஜாமணியை மட்டுமல்ல, நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவன் சின்னதுரையையும் அவர் வீட்டுக்குச் சென்று கூட பார்க்கவில்லை.

ஆனால், நீட் தேர்வைக் குறை கூறி இறந்தவுடன் தி-ஸ்டாக்கிஸ்ட் குடும்பமே இறந்து போன ஜெகதீஸ்வரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ஓடோடி போகிறார்கள்; ஓட்டு, அரசியல் லாபம் என்றால் எவர் காலிலும் விழுவதற்கும் கூசமாட்டார்கள்.

கீழநத்தத்தில் எவ்வித பகையும் முன்விரோதமும் இல்லாமல் வெறுமனே சாலையோர பாலத்தில் அமர்ந்து கொண்டிருந்த ராஜாமணி என்ற பட்டதாரி இளைஞனைக் கொலை செய்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. காவல்துறை வழக்கம்போல எல்லாவற்றையும் மூடி மறைப்பது போல இச்சம்பவத்தையும் மூடி மறைக்க எண்ணாமல் இதனுடைய உண்மைத் தன்மையை வெளிக் வெளிக்கொணர்ந்து சாதியக் கலவரம் தென் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கக்கூடிய வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் இக்கொலையால் பயன்பெற்ற பயனாளி யார் என்பதை அடையாளம் கண்டு நீதியை நிலைநாட்டவும் வலியுறுத்துகிறேன்.

காவல்துறை அதிகாரிகள் தாங்கள் சுதந்திரமாகச் செயல்படவும்; உண்மையாகவும் நியாயமாகவும் செயல்படக் கடமைப் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து எவ்விதமான அரசியல் அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் தென் தமிழகத்தில் இதுவே இறுதி சம்பவமாக இருக்கக்கூடிய வகையில் காவல்துறையின் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 379

0

0