தொகுதிகளை விட… திமுக நம்மை நடத்தும் விதம்தான்… : காங்., செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கேஎஸ் அழகிரி..!!!

5 March 2021, 4:15 pm
stalin-ks-alagiri-updatenews360
Quick Share

சென்னை : திமுகவிடம் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பேசியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் கட்சிகளை திமுக பேசியே வழிக்கு கொண்டு வந்து விடுகிறது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடித்து விட்ட திமுக, இன்று மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதியை கொடுத்து முடித்து விடலாம் என்று நினைக்கிறது.

கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு இந்த முறை திமுக 20 தொகுதிகள் வரைதான் ஒதுக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், 30 தொகுதிகளுக்கும் குறைவாக கொடுத்தால் வாங்க வேண்டாம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனை காங்கிரஸ் கட்சியும் திமுகவிடம் தெரிவித்து விட்டது. ஆனால், இதனை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. எனவே, 3வது அணியிடம் கூட்டணி வைப்பது என்ற முடிவையும் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது-

இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது, நாம் வைக்கு தொகுதிகளின் எண்ணிக்கையும், திமுக ஒதுக்குவதாகக் கூறும் தொகுதிகளின் எண்ணிக்கையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இந்த முறை குறைத்து வாங்கினால், அடுத்த முறை பேசக் கூட முடியாது. தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்தான் எனக் கூறி கே.எஸ். அழகிரி கண்கலங்கியுள்ளார்.

மேலும், திமுகவிடம் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி இந்தத் தேர்தலில் சாத்தியமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 30

0

0