தமிழகத்தில் பருவமழை தீவிரம் : வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்…!!

17 November 2020, 7:58 am
Sembarambakkam - Updatenews360
Quick Share

சென்னை: சென்னை, காஞ்சசிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது.

சென்னையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டில் பெரும் வெள்ளசேதம் ஏற்பட காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,780 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று இரவு 8 மணி நிலவரபடி அணையின் நீர்மட்டம் 20.70 அடியாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நிமிடமும் நீர்மட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் புழல் ஏரியில் உள்ளது. பூண்டி, சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அங்கு 8 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டியது. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்தது. இதனால் குற்றாலம், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மதுரையில் நேற்று காலை 9.30 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை கன மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் நீரில் தத்தளித்தபடி சென்றன. ராமநாதபுரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ராஜபாளையம், வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழையாக தொடங்கி மாலையில் பலத்த மழையாக கொட்டியது. ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்பட பல மாவட்டங்களிலும் இந்த மழை நீடித்தது. கனமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டம் மாம்பட்டு கிராமத்தில் புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று 4வது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. கடலூரில் உள்ள கெடிலம், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மூழ்கியது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.

இந்நிலையில் இன்று கடலூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

poondi lake - updatenews360

கடலூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காஞ்சீபுரத்தில் 16 செ.மீ., மரக்காணத்தில் 12 செ.மீ., வானமாதேவியில் 11 செ.மீ., கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரத்தில் 10 செ.மீ., திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், கேளம்பாக்கத்தில் தலா 9 செ.மீ., கடலூர், ஆரணி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் தலா 8 செ.மீ., செம்பரம்பாக்கம், பரங்கிப்பேட்டை, வந்தவாசி, அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Views: - 23

0

0