மக்களைக் கவர்ந்த மனோரமா ஆச்சி : மனங்கள் முழுதும் ஆச்சியின் ஆட்சி..!!!

Author: Babu
10 October 2020, 10:56 am
manorama 1- updatenews360
Quick Share

தமிழ் ரசிகர்கள் தவிர்க்க முடியாத பெயர் –
திரையுலகத்தின் தெய்வீகப் பெயர் –
ஐம்பத்தைந்து ஆண்டுகள் தமிழ்த் திரையை
ஆட்சி செய்த பெயர் –
ஐந்து முதல்வர்களோடு நடித்த ஒரே நடிகை எனும் சாதனைப் பெயர்!

மனோரமா –

வெள்ளித் திரையில் உலவிய வெற்றித் தாரகை!
சின்னத் திரையையும் சிங்காரித்த வண்ண ஆளுகை!
நாடக மேடையை நாப்பிளக்க வைத்த நடிப்புக் காரிகை!
ஆச்சி என அழைக்கப்பட்ட மனிதத் தூரிகை!

இன்று அவருடைய நினைவுநாள்.

1937ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதியன்று பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா! தந்தை வேறொரு பெண்ணோடு உறவு கொண்டு தாயையும், குழந்தை மனோரமாவையும் துரத்திய படியால், காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூரில்தான் வளர்ந்தார்.

அவர்கள் வாழ்வில் பட்டினியும், வறுமையும் பங்குதாரர்களாக ஆனதால், சிறு வயதிலேயே படிப்பை மூட்டை கட்டி விட்டு நாடகமேடையில் நடித்துச் சம்பாதித்தார் மனோரமா. நாடக உலகில் அவரது பெயர் பள்ளத்தூர் பாப்பா!

நாடக வாழ்வில் ராமநாதன் எனும் இன்னொரு நடிகரைக் காதலித்து மணந்து, பூபதி என்கிற ஆண் குழந்தையையும் பெற்ற பின்னர், அந்த ராமநாதன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் , மனோரமா தன் ஒற்றை மகனோடு தனியே வாழத் தொடங்கினார்.

அப்போது நாடகம் பார்க்க வந்த கண்ணதாசனின் கண்களில் பட்ட மனோரமாவை தன் “மாலையிட்ட மங்கை” எனும் வெற்றிப் படத்தில் அறிமுகப்படுத்தினார் கண்ணதாசன்.

அன்றிலிருந்து மனோரமாவை சினிமாவிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.

சென்னைத் தமிழ் பேசும் பெண்ணாக “திருமலை தென்குமரி” படத்தில் –
தஞ்சைத் தமிழ் பேசும் பெண்ணாக “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் –
குமரித் தமிழ் பேசும் பெண்ணாக “அநுபவி ராஜா அநுபவி” படத்தில் –
இலங்கைத் தமிழ் பேசும் பெண்ணாக “பைலட் பிரேம்நாத்” படத்தில் –
கொங்கு தமிழ் பேசும் பெண்ணாக “எசமான், சின்ன கவுண்டர்” படங்களில் –
பிராமணத் தமிழ் பேசும் பெண்ணாக “மெட்ராஸ் டு பாண்டிச்சேரி” படத்தில் –
பர்மா தமிழ் பேசும் பெண்ணாக “சவால்” படத்தில் –
அப்பப்பா! தமிழ் மொழியின் அத்துணை பரிமாணங்களையும் அள்ளி அள்ளி வழங்கினார் மனோரமா.

பைத்தியமாக, அடாவடிப் பெண்ணாக –
வழக்கறிஞராக, ஊமையாக, வெகுளியாக –
குடும்பத் தலைவியாக, வம்பளக்கும் மங்கையாக, வேலைக்காரியாக, எஜமானியாக ……….

மனோரமாவின் மகத்தான நவரச நடிப்பை விவரிக்கவோ, விளக்கவோ ஒரு வாழ்நாள் போதாது. கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை மனோரமா.

அவரது திறமையைப் பார்த்து தென்னகமே அவரை மதித்தது. அவரை சிவாஜி, எம்ஜிஆர், எம்ஆர் ராதா, கண்ணதாசன் போன்றோர் மட்டும்தான் பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்ற அனைவரும் அவரை மிக மரியாதையாக “ஆச்சி” என்றுதான் அழைப்பார்கள்.

எண்ணிப் பாருங்கள், எங்காவது ஒரு சாதாரண காமெடி நடிகைக்கு இந்த அளவு மரியாதை கிட்டுமா? தனது ஈடு இணையற்ற திறமையினால் அந்த அந்தஸ்தை அடைந்தவர் மனோரமா ஒருவரே!

நகைச்சுவை நடிப்பில் ஆண் நடிகர்கள் அனைவரும் சீசனுக்கு சீசன் மாறிக் கொண்டே போனார்கள். சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளி ராஜன், கவுண்டமணி, வடிவேலு, ஏ.கருணாநிதி, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், தங்கவேலு என்று பல ஆண் நகைச்சுவை நடிகர்கள் அவரவர் ஒவ்வொரு காலகட்டத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார்கள்.

ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் மனோரமா ஒருவரே தன் இடத்தை இழக்காமல், தன் மார்க்கெட்டை நிலையாக வைத்திருந்தார். நகைச்சுவை நடிப்பில் அன்றும் இன்றும் என்றும் ஒரே சக்ரவர்த்தினி ஆச்சி மனோரமா மட்டுமே.

கதாநாயகர்கள், கதாநாயகிகள், வில்லன்கள், இயக்குநர்கள், வசன கர்த்தாக்கள், கதாசிரியர்கள், கவிஞர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள்……. எல்லோரும் மாறி மாறிப் போன பின்பு கூட, மாறாத ஒரே நட்சத்திரமாக மனோரமா திகழ்ந்தார்.

அவரை ரசிகர்கள் “பொம்பளை சிவாஜி” என்று அன்போடு அழைத்தார்கள். திரையுலகப் பேரரசர்களான எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, விஜயகாந்த், அஜீத், விஜய, விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ்…… இப்படி எல்லா காலகட்ட நாயகர்களும் மனோரமாவின் நடிப்புத் திறமையை மதித்தவர்களே! முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும், ஜெயலலிதா அவர்களுக்கும் மனோரமா ஆச்சியை மிகவும் பிடிக்கும்.

இப்படி எல்லாத் தரப்பிலும் தன் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்த மனோரமா 2015ம் ஆண்டு இதே அக்டோபர் பத்தாம் தேதி மாரடைப்பால் தன் 78வது வயதில் காலமானார் – தமிழர்களின் நெஞ்சங்களில் கோலமானார் – நடிப்புக் கலைக்கே அவர் மூலமானார்.

அவரது திறமைக்கு என்றென்றும் நம் வணக்கம்!

Views: - 113

0

0