தமிழக ஜல்லிக்கட்டும் ராகுலின் மல்லுக்கட்டும்…

12 January 2021, 9:33 pm
Quick Share

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என்றாலே அவருடன் கூடவே ஏதாவது ஒரு பிரச்சினையும் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி இந்த மாத இறுதியில் தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார். குறிப்பாக அவர் மேற்குமண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சுறுசுறுப்பு அடைந்தனர். அவரை வரவேற்பதற்கு தடபுடல் ஏற்பாடுகளையும் செய்ய ஆயத்தமாகி விட்டனர். இந்த நிலையில் இன்று காங்கிரஸின் சுதி கொஞ்சம் மாறியது. ராகுல்காந்தி இந்த மாத இறுதியில் அல்ல அதற்கு முன்பாகவே அதுவும் பொங்கலையொட்டியே தமிழகத்திற்கு வந்து விடுகிறார் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார். அதுவும் வருகிற14-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் உற்சாகமாக சொன்ன தகவல் என்னவென்றால் “ஜல்லிக்கட்டில் தமிழர்களின் வீரம், பெருமையை பார்த்து, ரசித்து, கண்டு களிக்கவே ராகுல் வருகிறார் இதில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான விஷயங்கள் எதுவும் இருக்காது” என்றும் அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று ராகுலின் தமிழ் வணக்கம் என்ற தலைப்பில் 14-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டைப் பார்க்க ராகுல்காந்தி வருகிறார்” என்றும் மகிழ்ச்சி பொங்க கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

சமீபகாலமாக எந்த ஒரு தேசியக் கட்சியின் தலைவரும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு இந்தளவிற்கு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. சரி, ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்ப்பது நல்ல விஷயம் தானே, பெருமைக்குரிய ஒன்று தானே, இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று சிலர் அங்கலாய்த்துக் கொள்ளலாம். பல நூற்றாண்டு காலமாக பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கமான ஒன்றுதான். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் வரலாற்றை சற்று ஆய்வு செய்யும்போது சமீப கால சிந்தனைகளும் ஞாபகமறதி எதுவுமின்றி தமிழர்களுக்கு அப்படியே வந்துவிடுகின்றன.

அதுவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்த பிரச்சினைகள், தமிழர்களை வெகுவாக மனம் நோகச் செய்கிறது. அதனால் இங்கே கொஞ்சம் பிளாஷ்பேக்கிற்கு செல்வது அவசியம். தமிழகத்தில் 2008-ம் ஆண்டுக்கு முன்பு வரை எவ்வித சிக்கலும்
இன்றி ஜல்லிக்கட்டு அமைதியாகத்தான் நடந்து வந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா இந்தியா என்னும் பிராணிகள் நல அமைப்பு இதற்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து ஜல்லிக்கட்டு கூடாது என எதிர்ப்பும் காட்டியது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசால் ‘ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009’ கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பிரச்சினையின்றி நடந்தது. ஆனால் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 2014-ம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதற்கு இன்னொரு வலுவான பின்னணியும் உண்டு.

2011–ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சிங்கம், புலி, யானை, குரங்கு போன்ற விலங்குகள் பட்டியலில் காளை மாடுகளையும் சேர்த்து காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதித்தது. அதன் காரணமாகவும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இந்த பட்டியலில் இருந்து காளையை நீக்கினால் மட்டுமே ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த இயலும் என்ற இக்கட்டான நிலையும் ஏற்பட்டது.

ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கு மறுத்துவிட்டது. இது ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சாதகமான அம்சமாக அமைந்தது. அப்போது மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த திமுகவும் இதை தீவிரமாக எதிர்க்கவில்லை என்ற குற்றச் சாட்டும் உண்டு.
இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் பலமுறை எழுப்பப்பட்ட போதிலும் மன்மோகன்சிங் அரசு இதில் அதிக அக்கறை காட்டாமல் நழுவிக் கொண்டது.

சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் பாலமேடுபோன்ற இடங்களில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் உருவானது. ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்த்து வந்தவர்கள் அதை அடிமாட்டுக்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கும் அவல நிலையும் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி வீரியமிக்க காளைகள் உருவாவதும் தடைபட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏதாவது உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றிருக்கும்.

ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆர்வம் காட்டாததால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கைநழுவிப்போய் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடக்கவில்லை. இதன்பின்பு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் மாபெரும் புரட்சி வெடித்தது. மக்களின் தன்னெழுச்சி போராட்டமாக இது உருவானது. சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடு நீக்கப்பட்டது.

அதற்கு மோடி தலைமையிலான பாஜக அரசிடம் உடனடியாக ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெற ஓ.பன்னீர் செல்வம் வழிவகுத்தார். இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்ற சிறப்பு அடைமொழியும் உண்டு. அதன் பிறகு தமிழகத்தில் எந்த சிக்கலுமின்றி ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல்காந்தி14-ந் தேதி கண்டுகளிக்க போவதாக கே. எஸ். அழகிரி பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

இது பற்றி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகையில் “தமிழர்களுக்கு தீங்கு விளைவிப்பதிலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதிலும் மத்திய காங்கிரஸ் அரசை போல் வேறு எந்த அரசும் நடந்துகொண்டதில்லை. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
மாறாக, தமிழர்களை அழிக்கும் பணியில் ஈடுபட்ட ராஜபக்சே அரசுக்கு அத்தனை உதவிகளையும் சோனியாவின் கீழ் இயங்கிய அரசு செய்து கொடுத்தது.

அதுபோல் தான் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டையும் ஒழித்துக் கட்ட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல எந்த ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கும் ராகுல் காந்திக்கோ அல்லது சோனியாவுக்கோ எந்த அருகதையும் கிடையாது. ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் இப்படி ஒரு யோசனையை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
இது பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல் உள்ளது.

தமிழகத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு என்பதெல்லாம் கர்மவீரர் காமராஜரோடு முடிந்து விட்டது. ராகுல்காந்தி என்ன நாடகம் போட்டாலும் தமிழர்களிடம் இழந்துபோன மதிப்பையும், மரியாதையையும் பெற முடியாது” என்று ஆவேசத்துடன் கூறினர். ஜல்லிக்கட்டுடன் ஏன் ராகுல் மல்லுக்கட்ட வேண்டும்?… ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!

Views: - 8

0

0