தனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 9:31 pm
DMK Congress -Updatenews360
Quick Share

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திருக்கிறது.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது வராத ஞானோதயம், அது.

கே.எஸ் அழகிரியின் ஞானதோயம்

2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சியாக இருந்த காங்கிரசுக்கு
15 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. 2014 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. மீண்டும் திமுக கூட்டணியில் சேர்ந்த காங்கிரசுக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

Congress leader KS Alagiri backtracks invitation to Kamal, criticises him  for attacking DMK - Elections News

அதுமட்டுமல்லாமல் 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 41. அது 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆக குறைந்து போனது.

இதில் 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களின்போது தமிழக காங்கிரசுக்கு தலைவராக இருந்தவர், தற்போதும் இருப்பவர் கே.எ.ஸ் அழகிரிதான். இந்த இரு தேர்தல்களிலும் முந்தைய தேர்தலை விட குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட ஒப்புக் கொண்டவரும் அவர்தான்.

எனினும், தனது காலத்தில் காங்கிரஸ் அதிக சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்று, டெல்லி மேலிடத்திற்கு புள்ளிவிவரம் சொல்லி கே.எஸ். அழகிரி இதுநாள்வரை பெருமிதப்பட்டுக்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்துள்ளது.

Tamil Nadu Assembly election 2021: Congress won't seek share in power if  DMK is elected, says KS Alagiri-Politics News , Firstpost

இந்த தேர்தலில் தனது கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள காங்கிரசை திமுக கண்டுகொள்ளவே இல்லை. ஒட்டுமொத்தமாக 3 சதவீத இடங்களைக் கூட திமுக ஒதுக்காமல் ஓரம் கட்டி விட்டது. இதுதான் கே.எஸ். அழகிரியின் திடீர் ஞானோதயத்திற்கும், ஆவேசத்திற்கும் காரணம்.

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

அதனால்தான் அவர் ஒரு புதிய கோஷத்தை எழுப்பி இருக்கிறார். அவர் கூறும்போது, “உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியமே இல்லை. அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டு தங்களுடைய பலத்தை காட்டவேண்டும். ஏனென்றால் உள்ளாட்சி அமைப்புகள்தான் உண்மையான ஜனநாயகத்திற்கு ஆணிவேர். மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும்.
உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமின்றி எந்தத் தேர்தலிலும் எதிர்பார்க்கும் தொகுதிகள் நமக்கு கிடைப்பதில்லை. அதற்கு உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது மிகவும் அவசியம்” என்று சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோல அங்கலாய்த்து இருக்கிறார்.

மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

இதற்கும் ஒருபடி மேலே போய், திமுகவின் கொள்கைக்கு எதிராக ஒரு குண்டையும் தூக்கி போட்டிருக்கிறார். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக, திமுக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

TNCC chief's institute gets notice | Chennai News - Times of India

ஆனால் கே.எஸ். அழகிரியோ இவ்விவகாரத்தில் திமுகவின் காலை வாரிவிட்டு இருக்கிறார்.
“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற திமுகவின் கோரிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அது பொதுப் பட்டியலில் நீடித்தால்தான் மத்திய அரசின் நிதி உதவிகள் மாநில அரசுக்கு தொடர்ந்து கிடைக்கும்”, என்று பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதை கே.எஸ்.அழகிரி வரவேற்றுள்ளார்.

திமுக – காங்., இடையே விரிசல்

கல்வி விஷயத்தில் காங்கிரஸ் இப்படி சேம் சைடு கோல் போடும் என்று திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அழகிரியின் இந்தக் கருத்து திமுக-காங்கிரஸ் இடையேயான விரிசலை மேலும் விரிவடைய வைத்துள்ளது.

Will not seek share in power from DMK,' says TN Congress - Hindustan Times

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரசை திமுக கிட்டத்தட்ட கழற்றி விட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து காங்கிரசுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகலாம் என்பதை திமுக உணர்ந்து வைத்திருந்ததால்தான் காங்கிரஸிடம் இருந்து சற்று விலகியே நிற்கிறது.

Tamil Nadu local body polls' delay due to delimitation of wards, poll body  tells SC - The Hindu

இது அழகிரிக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே அவர் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் நமது பலத்தை காண்பித்தால்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலின்போது அதிக தொகுதிகளை பேரம்பேசி வாங்க முடியும். உள்ளாட்சித் தேர்தல் மிக முக்கியமானது. அதற்காக கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் இப்போதே தயாராக வேண்டும். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர் வீட்டின் முன்பாகவும் நமது கட்சியின் கொடி பறக்கவேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

திமுகவுக்கு மட்டும் 95%

அதை உண்மை என்று கூறுவதுபோல தற்போது நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மட்டுமின்றி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் மிகவும் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது சுமார் 95 சதவீத இடங்களை திமுக தனக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனித்து போட்டியிட்ட காங்கிரஸ்

வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு போட்டியிட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதால் காங்கிரஸ் தனித்தே வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. அதாவது திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் அதிரடி காட்டி இருக்கிறது.

K S Alagiri: Latest News & Videos, Photos about K S Alagiri | The Economic  Times - Page 1

திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஊராட்சி ஒன்றியக் குழு பதவிக்கான இடங்களை போதிய அளவில் ஒதுக்காததால் திமுகவுக்கு எதிராக இந்த கட்சிகளும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே ஓரளவு இடங்களை அக்கட்சிக்கு திமுக ஒதுக்கி இருக்கிறது. இதனால் மற்ற மாவட்டங்களில் அக்கட்சியும் தனித்து தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

திமுக- அதிமுக இடையே கடும் போட்டி

மதிமுகவின் நிலையோ பரிதாபம். அக்கட்சியில் இருந்து முக்கிய பதவிகளுக்கு யாரும் போட்டியிட விடாதபடி ஏராளமானோர் விலை பேசப்பட்டு விட்டனர். அதனால் இந்த தேர்தலில் மதிமுக போட்டியிடுகிறதா? என்கிற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. எனவே இந்த 9 மாவட்டங்களிலும் பெரும்பாலான பதவிகளுக்கு அதிமுக-திமுக இடையேதான் பலத்த போட்டி காணப்படுகிறது.

AIADMK, DMK to clash only in 8 LS seats: Are Dravidian foes avoiding a  direct contest? | The News Minute

நெருக்கடியில் காங்கிரஸ்

கே.எஸ்.அழகிரிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. இருந்தாலும் கட்சிக்கு உள்ள செல்வாக்கை காட்டவேண்டிய நெருக்கடி காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் இது மாநிலம் முழுவதும் பரவலாக நடக்கக்கூடிய தேர்தல். மாநகராட்சி மேயர், நகரசபைத் தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு கட்சியின் சின்னங்களில் அடிப்படையில்தான் தேர்தல் நடைபெறும். அப்போது கூட்டணி வலுவாக இருந்தால்தான் யாராலும் வெற்றி பெற முடியும். இதனால், இந்தத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளை அனுசரித்துதான் செல்லும் என்று காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்புகின்றன.

அரசியல் நோக்கர்கள் கருத்து

இதுபற்றிய அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “தமிழகத்தில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் திமுகவால் ஜெயிக்க முடியாது என்று கே.எஸ்.அழகிரி உறுதியாக நம்புகிறார். அதேபோல்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரசின் தயவு திமுகவுக்கு கண்டிப்பாக தேவைப்படும் என்பதும் அவருடைய கணக்கு.

DMK, Congress to identify constituencies from today - DTNext.in

ஆகவேதான் ஊராட்சி தேர்தல்களிலும் எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தங்களது பலத்தை காண்பிக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகக் கூறுகிறார். அவர் இப்படி சொல்வதைப் பார்த்தால், தனித்து நின்றால் திமுகவால் மட்டுமின்றி எந்த கட்சியாலும் பெரும் வெற்றியை குவிக்க முடியாது என்று அர்த்தம் ஆகிறது.

திமுகவுக்கு கே.எஸ் அழகிரி எச்சரிக்கை?

அதனால் இனி வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் இரண்டிலும் திமுக தங்களை புறக்கணித்து விடக்கூடாது, ஒருவேளை அப்படி நடந்து விட்டால் அது எதிரணிக்குத்தான் ஆதாயமாக அமையும் என்று திமுகவை அழகிரி எச்சரிக்கை செய்வது போலவும் தெரிகிறது.

கல்வி பொதுப்பட்டியலில்தான் தொடர்ந்து, இருக்கவேண்டும் என்று அவர் கூறுவதற்கு காரணம் 1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றதுதான்.

எப்படிப்பார்த்தாலும் திமுகவுக்கு எதிராக அவ்வப்போது ஏதாவது கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தால்தான் தமிழகத்தில் காங்கிரசால் அரசியல் செய்ய முடியும், திமுக கூட்டணியில் நீடிக்கவும் முடியும் என்ற உண்மையை அழகிரி நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறார். அதனால்தான் அவரிடமிருந்து குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் எதிர்மறை கருத்துகள் வெளிப்படுகின்றன.

DMK allocates 25 Tamil Nadu Assembly seats, Kanyakumari LS seat to ally  Congress

மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக்கு 5 இடங்களை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றொரு பேச்சு அறிவாலய வட்டாரத்தில் அடிபடுகிறது. அது நிஜமாகிவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கை உணர்வு காரணமாகவும் அழகிரி இப்படி பேசியிருக்கலாம். அதாவது பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலினை சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்மொழிய நேர்ந்தால் அது காங்கிரசுக்கு தர்மசங்கட நிலைமையை ஏற்படுத்தும். அதைத் தவிர்க்கும் நோக்கத்துடனும் கே.எஸ்.அழகிரி இப்படி அதிரடியாக பேசியிருக்கலாம்” என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

எது எப்படியோ, அழகிரியின் இந்த திடீர் ஆவேசம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை!

Views: - 207

1

0