கவனத்தை ஈர்த்த சாயல்குடி பேரூராட்சி… டெபாசிட் இழந்த திமுக… குஷியில் ம.நீ.ம., விஜய் மக்கள் இயக்கம்..!!

Author: Babu Lakshmanan
22 February 2022, 10:56 am
Quick Share

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு ஆச்சர்யமான முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், பெரும்பாலான மாநகராட்சிகளில் திமுகவே முன்னிலை பெற்றுள்ளது. அதோடு, நிறைய பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளையும் அக்கட்சியே கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் 50%க்கு மேலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

கோவை மாவட்டம் சமத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8ல் திமுகவும், 4ல் காங்கிரசும் வெற்றி பெற்றது. வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது. 19 வார்டுகளில் தி.மு.க. வெற்றி, தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர். 12 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டம் கானம் பேரூராட்சியைக் கைப்பற்றியது திமுக. பேரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13ல் திமுகவும், 2ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 10ல் வெற்றி பெற்றனர். அதிமுக 4-லும், காங்., 1லும் வெற்றி. 12 இடங்களைக் கொண்ட தாடிக்கொம்பு பேரூராட்சியில் 12 இடங்களை திமுக வென்றது.

இதனிடைய, இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர் அப்பகுதி வாக்காளர்கள்.

இதேபோல, இராணிப்பேட்டை வாலாஜா நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார்.

முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. திருவாரூர் நகராட்சியின் 1வது வார்டில் அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களி திமுக கைப்பற்றியிருந்தாலும், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பேரூராட்சியின் 9வது வார்டில் திமுக டெபாசிட் இழந்தது. பாஜக வேட்பாளர் 230 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். திமுக 30 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தது.

Views: - 767

0

0