உள்ளாட்சி தேர்தலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த தளபதி : சுயேட்சையாக களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்…?

Author: Babu Lakshmanan
18 September 2021, 2:16 pm
vijay - updatenews360
Quick Share

9 மாவட்டங்களுக்கு நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கு நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் நேற்று சந்தித்து பேசியுள்ளார். இதில், தேர்தல் நடக்கும் 9 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Vijay Case -Updatenews360

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தினர், ஏற்கனவே நடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களின் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். அதில், வெற்றியும் பெற்றுள்ளனர். எனவே, இந்த முறையும் போட்டியிட இருக்கின்றனர், எனக் கூறினர்.

விரைவில் தளபதி விஜய் அரசியல் பிரவேசம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் இதுபோன்று தேர்தல்களில் போட்டியிடுவது, முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Views: - 211

0

0