ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று…நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை..!!

Author: Aarthi Sivakumar
22 September 2021, 10:22 am
Quick Share

சென்னை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 755 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2ம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 626 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்களுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இரண்டுக்கும் சேர்த்து வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை 64,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

Views: - 220

0

0