மதுசூதனன் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு : அரைக்கம்பத்தில் கட்சிக் கொடியை பறக்க விட அதிமுக உத்தரவு!!

Author: Babu Lakshmanan
5 August 2021, 5:39 pm
madhusudhanan - admk - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக அவைத்‌ தலைவரும்‌, கழகத்தின்‌ மூத்த முன்னோடியும்‌, முன்னாள்‌ அமைச்சருமான அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்கள்‌ உடல்நலக்‌ குறைவால்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்‌, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார்‌ என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்‌ துயரமும்‌, மிகுந்த மனவேதனையும்‌ அடைந்தோம்‌.

புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களின்‌ விசுவாசமிக்க தொண்டர்‌; புரட்சித்‌ தலைவருக்காக எதையும்‌ தியாகம்‌ செய்யத்‌ துணிந்த ரசிகர்‌; புரட்சித்‌ தலைவர்‌ கண்ட பேரியக்கம்‌ வெற்றிபெற வேண்டும்‌ என்பதற்காக, இயக்கத்தின்‌ தொடக்க நாள்‌ முதல்‌ தன்‌ விழிகளின்‌ இமைகள்‌ மூடும்வரை ஒயாது உழைத்த கழக உடன்புறப்பு; புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ நம்பிக்கைக்குரிய போர்ப்படைத்‌ தளபதி; கழகத்‌ தொண்டர்களை எப்பொழுதும்‌ தன்‌ தோள்களில்‌ வைத்துக்‌ கொண்டாடிய, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ வேர்களில்‌ ஒன்று என பலவாறாகவும்‌ அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்கணளப்‌ பற்றி வரலாறு சொல்லும்‌.

கழகத்தின்‌ சோதனையான காலக்கட்டங்களில்‌ கழகத்தைக்‌ கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய கழகத்தின்‌ தூண்‌ சரிந்ததே என்று கண்ணீர்க்‌ கடலில்‌ மூழ்கி இருக்கும்‌ நமக்கெல்லாம்‌ யார்‌ ஆறுதல்‌ சொல்ல முடியும்‌? உண்மையிலேயே அவரது இழப்பு கழகத்திற்கும்‌, புரட்சித்‌ தலைவரின்‌ ரசிகர்களுக்கும்‌ ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்‌.

அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்கள்‌, 1953-ஆம்‌ ஆண்டு புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. ரசிகர்‌ மன்றத்தினைத்‌ தொடங்கி, அதனைத்‌ தொடர்ந்து வடசென்னை பகுதியில்‌ எம்‌.ஜி.ஆர்‌. பெயரில்‌ மன்றங்களை அமைத்து, சிறுவர்கள்‌ படிக்கும்‌ வண்ணம்‌ எம்‌.ஜி.ஆர்‌. பெயரில்‌ இரவு பாடசாலைகளைத்‌ தொடங்கியவர்‌. சென்னை மாவட்டத்தைச்‌ சேர்ந்த கழக உடன்பிறப்புகள்‌ அனைவராலும்‌ “அஞ்சா நெஞ்சன்‌”! என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்கள்‌, புரட்சித்‌ தலைவர்‌ இயக்கம்‌ தொடங்கியபோது, புரட்சித்‌ தலைவர்‌ நீக்கப்பட்டதைக்‌ கண்டித்து சிறையில்‌ இருந்துள்ளார்‌; கழகத்திற்காக ஏறத்தாழ 48 முறை சிறை சென்றுள்ளார்‌.

வட சென்னை மாவட்டத்தில்‌, பகுதிக்‌ கழகச்‌ செயலாளராக, மாவட்ட எம்‌.ஜி.ஆர்‌. மன்றச்‌ செயலாளராக, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளராகப்‌ பணியாற்றிய அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்களை புரட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ தமிழக மேலவை உறுப்பினராக ஆக்கினார்‌.

புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌, 1991-ல்‌ நடைபெற்ற சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலின்‌ போது, சட்டமன்ற உறுப்பினராக்கி அமைச்சர்‌ பதவி வழங்கி அழகுபார்த்தார்கள்‌. அதனைத்‌ தொடர்ந்து, மாண்புமிகு அம்மா அவர்களால்‌ கழக கொள்கை பரப்புச்‌ செயலாளர்‌, அனைத்துலக எம்‌.ஜி.ஆர்‌. மன்றச்‌ செயலாளர்‌ ஆகிய பொறுப்புகள்‌ வழங்கப்பட்டு, சிறந்த முறையில்‌
கழகப்‌ பணிகளை ஆற்றியவர்‌.

பின்னா்‌, மாண்புமிகு அம்மா அவர்களின்‌ நல்லாசியோடு 5.2.2007 அன்று நடைபெற்ற கழகப்‌ பொதுக்குழுவில்‌ அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்கள்‌ கழக அவைத்‌ தலைவராக தேர்வு செய்யப்பட்டு, தற்போதுவரை சீரிய முறையில்‌ கழகப்‌ பணிகளை ஆற்றி வந்தவர்‌. ஏறத்தாழ 70 ஆண்டுகள்‌ புரட்சித்‌ தலைவரின்‌ புகழ்பாடி, கழக வளர்ச்சிக்காகப்‌ பாடுபட்டு, வாழ்நாளெல்லாம்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌., புரட்சித்‌ தலைவி அம்மா ஆகிய நம்‌ இருபெரும்‌ தலைவர்களின்‌ விசுவாசத்‌ தொண்டராக வாழ்ந்து மறைந்த அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்களை இழந்து வாடும்‌ அவரது குடும்பத்தினருக்கும்‌, அவரது உற்றார்‌ உறவினர்களுக்கும்‌, இந்தத்‌ துயரத்தைத்‌ தாங்கிக்‌ கொள்ளக்கூடிய சக்தியையும்‌, தைரியத்தையும்‌ அளிக்க வேண்டும்‌ என்றும்‌, அன்னாரது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாறவும்‌, ஒன்றரைக்‌ கோடி கழகத்‌ தொண்டர்களின்‌ சார்பிலும்‌, எங்கள்‌ சார்பிலும்‌ எல்லாம்‌ வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறோம்‌.

கழக அவைத்‌ தலைவர்‌ அண்ணன்‌ திரு. இ. மதுசூதனன்‌ அவர்களின்‌ மறைவையொட்டி 5.8.2021 முதல்‌ 7.8.2021 வரை மூன்று நாட்கள்‌ துக்கம்‌ அனுசரிக்கப்படும்‌. அதே போல்‌, தமிழ்‌ நாடு மற்றும்‌ கழக அமைப்புகள்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ பிற மாநிலங்களிலும்‌, கழகக்‌ கொடி அரைக்‌ கம்பத்தில்‌ பறக்கவிடப்படும்‌ என்பதையும்‌; அனைத்து கழக நிகழ்ச்சிகளும்‌ மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, எனக் கூறியுள்ளனர்.

Views: - 321

0

0