பாஜக ஆட்சி அடுத்த மாதம் கவிழுமா? 28 தொகுதி இடைத்தேர்தலில் ஊசலாடும் மத்தியப் பிரதேச அரசு!!

Author: Babu
6 October 2020, 8:42 pm
MP 2- updatenews360
Quick Share

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் பாஜக ஆட்சி அடுத்த மாதம் கவிழுமா அல்லது நிலைக்குமா என்பதை நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் 28 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு செய்யும். தேர்தல் நடைபெறும் இடங்களில் 9 தொகுதிகளை பாஜக பெற்றால் போதும் என்றாலும், 28 தொகுதிகளும் ஏற்கனவே காங்கிரஸ் கைவசம் இருந்த இடங்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் 2018 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த ஜோதி ராஜித்ய சிந்தியா கட்சியை விட்டு விலகி அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேர்ந்தார். அதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஆனால், கட்சி மாறிய 25 காங்கிரஸ் உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய கட்டாயத்தால் பதவி விலகினர். இதைத் தொடர்ந்து சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்தது.

மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 230 இடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே, மூன்று காலியாக இருந்தது, காங்கிரஸ் உறுப்பினர்கள் 25 பேர் பதவி விலகியதால் மொத்தம் 28 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள 202 உறுப்பினர்களில் பாஜகவுக்கு இருக்கும் 107 உறுப்பினர்கள் பெரும்பான்மைக்குப் போதுமானது. ஆனால், 230 உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இடம்பெறும்போது, பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் வேண்டும். எனவே, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவுக்கு மேலும் 9 தொகுதிகள் தேவைப்படுகிறது.

எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 88 உறுப்பினர்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் 21 இடங்களில் வென்றால் அவர்களை ஆதரிக்கும் பிஎஸ்பி (மாயாவதி கட்சி) உறுப்பினர்களின் ஆதரவையும் சுயேச்சைகளில் துணையுடனும் ஆட்சி அமைக்க முடியும். பாஜகவுக்கு 9 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற சூழல் இருந்தாலும் அனைத்து இடங்களும் காங்கிரஸ் வென்ற தொகுதிகள் என்பதால் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனாவைத் தொடர்ந்து ஊரடங்கில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பலர் வேலையையும் தொழிலையும் இழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச நகரங்களில் வேலை பார்த்துவந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கொரோனா காரணமாக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு இன்னும் வேலை அளிக்கப்படவில்லை என்பதை மையமாக வைத்தே காங்கிரஸ் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களே பெரும்பாலும் பாஜக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். தாங்கள் கட்சி மாறியதற்குக் காரணங்களை அவர்கள் தொகுதி மக்களிடம் விளக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

கட்சி மாறிய காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவும், தனது செல்வாக்கைக் காட்ட வேண்டிய கட்டாயமிருக்கிறது. அவர் காங்கிரசை விட்டு விலகிய பிறகு, காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் இல்லாமல் இந்தத் தேர்தலை சந்திக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேச பாஜக ஆட்சி நிலைக்குமா, கவிழுமா என்பது நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும். மத்தியப் பிரதேசம் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நேரடிப்போட்டி நடைபெறும் மாநிலம் என்பதால் இருகட்சிகளுக்கும் இது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும், இதன் முடிவுகள் அடுத்துவரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பிரதிபலிக்கும்.

Views: - 37

0

0