மதுரை எய்ம்ஸ் விவகாரம்… ரூட்டை மாற்றும் திமுக ; மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 3:55 pm
Quick Share

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் மதுரை மாவட்டத்தில் ரூ.6.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார ஆய்வகம் மற்றும் சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். ஆனையூர் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ச.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி சேதமடைந்து உள்ளதால், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு அருகிலேயே 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. அடுத்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் துவங்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான நிதி சார்ந்த பணிகள் குறித்து ஜெய்கா அமைப்பின் துணை தலைவரை சந்தித்து கேட்டோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் 2024க்குள் முடித்து, கட்டிடம் கட்டி முடிக்க 2028 இறுதி ஆகிவிடும் என தெரிவித்து உள்ளனர்.

ஒன்றிய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், ஜெய்க்கா நிறுவனத்திடம் தமிழக அரசின் மூலமாக நாமே தன்னிச்சையாக பேசி நிதியை கோரியிருக்கிறோம். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் ஆண்டு தோறும் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தி வருகிறோம்,” என்றார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை 155 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் டவர் பிளாக் கட்டிடம் 2.5 மாதத்தில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

இந்தியாவில் கட்டப்பட்டு வரும் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசின் நிதி பங்கு இருந்தது. ஆனால், மதுரை எய்ம்ஸ்க்கு இல்லை. நிதி அளிக்கும் ஜெய்கா நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த ஆண்டு இறுதிக்குள் டிசைன் மற்றும் டெண்டர் பணிகள் ஆரம்பித்து 2024 டிசம்பருக்குள் பணிகள் நிறைவுறும். பின், 2028க்குள் கட்டுமான பணிகள் முடிவுற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்த ஒன்றிய அமைச்சர்களிடம் மீண்டும் வலியுறுத்த உள்ளோம். ஒன்றிய அரசுக்கு நிதியை உடனே விடுவிக்க ஜெய்கா நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் உள்ளார். அவரின் உடல்நிலை குறித்து சந்தேக பேர்வழிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்தார்.

Views: - 302

0

0