கட்சி பதவிகளுக்கு விலை நிர்ணயம்…? மதுரையில் ஒட்டப்பட்ட திமுக போஸ்டர்களால் சலசலப்பு!

Author: Babu Lakshmanan
11 September 2021, 3:17 pm
Stalin - dmk - updatenews360
Quick Share

கட்சியின் தலைவர்களுக்கு மொட்டை பெட்டிசன் போடுவது எல்லா கட்சிகளிலுமே நடக்கும் சர்வ சாதாரண நிகழ்வு. பிரபல அரசியல் கட்சிகளுக்கு இந்த தலைவலி சற்று அதிகமாக இருக்கும். அதுவும் ஆளும் கட்சியாக இருந்தால் மொட்டை பெட்டிசன்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு மாநிலம் முழுவதும் இருந்து கட்சி மேலிடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்து கொண்டே இருக்கும். அதுபற்றி விசாரிப்பதற்காகவே கட்சித் தலைவர்கள் நம்பகமான பொறுப்பாளர்களை நியமிப்பதும் உண்டு.

அதன் எதிரொலியாக இயல்பாகாவே கட்சியில் பல்வேறு கோஷ்டிகள் உருவாகிவிடும்.

மதுரையும், போஸ்டரும்..

மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு மதுரையில் அவருடைய ஆதரவாளர்கள் அழகிரி பிறந்தநாளின்போது மனக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக SUNனோட, SONனுக்கே தடையா?…

alagiri updatenews360

அண்ணே அண்ணே…
அழகிரி அண்ணே…
நம்ம கட்சி நல்ல கட்சி
மதுரையில இப்ப
ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே…
என்பன போன்ற அட்டாக் வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை அச்சடித்து
ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது உண்டு.

தங்களது குடும்பத்தின் சுப நிகழ்ச்சிகளின்போதும் மு.க. அழகிரியை முன்னிலைப்படுத்தி அசத்தலான போஸ்டர்களை அடித்து நகரம் முழுவதும் ஒட்டுவார்கள்.

நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் போன்ற பிரபல நடிகர்களுக்கும் அவர்களது பிறந்த நாளின்போதும், புதிய படங்கள் வெளியீட்டின்போதும் சிந்தனைகளைத் தூண்டும் புதுப்புது பஞ்ச் டயலாக்குகளுடன் தூள் பறக்கும் போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்படும்.

காசு இருந்தால் பொறுப்பு

அந்த வகையில் மதுரை மாவட்ட திமுக தொண்டர்கள் பெயரில் அச்சிடப்பட்டு மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ஒரு பரபரப்பு போஸ்டர்தான் தமிழக அரசியலில் இன்றைய ‘ஹாட் சப்ஜெக்ட்’.

அந்த போஸ்டரில் மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பிற்கு
5 லட்சம் ரூபாய், பகுதிச் செயலாளர் பொறுப்பிற்கு 3 லட்சம் ரூபாய், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்சம் ரூபாய், வட்டச்செயலாளர் பொறுப்பிற்கு 2.5 லட்சம் ரூபாய் என்று பகிரங்கமாக கட்சிப் பதவிகளை ஏலம் விடுவதுபோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

madurai poster - updatenews360

அதுமட்டுமல்ல, அதில் காணப்படும் சில வாசகங்கள் பொதுமக்களை பீதியடைய செய்வதுபோலவும் அமைந்துள்ளது.

இந்தப் பதவிகளுக்கு குண்டாஸ் பெற்றவர்கள், அதாவது குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தகுதி உடையவர்கள் என்றும், “உழைத்தவனுக்கு ஒன்றுமில்லை, பணம் இருந்தால் கட்டாயம் பதவி உண்டு, பகுதிக்குள் இருக்க வேண்டிய அவசியமில்லை”என்ற வாசகங்களும் காணப்படுகின்றன.

அதாவது வேறு ஒரு பகுதியில் உள்ளவர்களும் கையில் கணிசமான பணம் வைத்திருந்தால் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுகவில் முக்கிய நிர்வாகி பதவியைப் பெற்று விட முடியும் என்றும் இந்த போஸ்டரில் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த போஸ்டரின் கீழ்ப் பகுதியில் இப்படிக்கு மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக உண்மை தொண்டர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

மதுரை திமுக வரலாறு

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொன். முத்துராமலிங்கம், கோ. தளபதி மூவருக்குமே தனிப்பட்ட முறையில் ஆதரவாளர்கள் அதிகம் உண்டு. இந்த போஸ்டர்கள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்.முத்துராமலிங்கத்தை தாக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ளதாக மதுரையில் அரசியல் கட்சித் தலைவர்களிடையே பரபரப்பு பேச்சு உள்ளது.

1984,1989 தேர்தல்களில் மதுரை மேற்கு தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்தான் பொன். முத்துராமலிங்கம். 1989-ல் அமைச்சராகவும் பதவி வகித்தவர். 1994-ல் வைகோ மதிமுகவை தொடங்கியபோது அக்கட்சிக்கு சென்றுவிட்டு பின்னர் மீண்டும் திமுக திரும்பினார். இதனால் அவர் திமுகவில் விட்ட இடத்தை பிடித்து மீண்டும் முக்கிய பொறுப்பிற்கு வர நீண்ட காலம் பிடித்தது.

Vaiko Condemned -Updatenews360

2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட
பொன்.முத்துராமலிங்கம் திமுக சார்பில் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ. தளபதிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் வாய்ப்பு அளிப்பதாக கூறி கோபத்தில் இருந்த பொன்.முத்துராமலிங்கத்தை கட்சி மேலிடம் சமாதானப் படுத்தியது.

இந்த நிலையில்தான் மதுரை நகர திமுக இளைஞர் அணியில் நிர்வாகி பதவிகள் பேரம் பேசி விற்கப்படுவதாக கடந்த சில வாரங்களாகவே கட்சிக்கு வெளியேயும் பேசப்பட்டு வந்தது.

தற்போது அதை உண்மை என்று கூறுவதுபோல் போஸ்டர்களும் அடித்து ஒட்டப்பட்டுள்ளன.
கட்சிக்காக 20, 25 வருடங்களுக்கும் மேலாக கடுமையாக உழைத்து வருபவர்களுக்கு திமுகவில் எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வபோது கட்சிக்குள் மட்டுமே வைக்கப்பட்டு வந்த நிலையில் இந்தப் போஸ்டர்கள் திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வைக்கிறது.

திமுக தலைமைக்கு தலைவலி

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது மதுரை மாநகரில் திமுக வெற்றி பெற்றால் மேயராக பொன். முத்துராமலிங்கம் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று அவருக்கு முன்பே வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர் இப்போதே மேயர் போல கட்சிக்காரர்களிடம் நடந்துகொள்வதாக திமுக நிர்வாகிகளிடம் மனக்குமுறல் உள்ளது. அவருடைய பரிந்துரையின் பேரில்தான் மதுரை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொதுவாக எல்லாக் கட்சிகளிலும் மாவட்ட செயலாளர்கள் வைக்கும் வேண்டுகோளின்படிதான் அந்தந்தப் பகுதிகளில் நிர்வாகிகள் நியமனம் இருக்கும். அதை தவறு என்று கூற முடியாது.
ஆனால் கட்சிக்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தவர்களுக்கு பதவி இல்லை என்று கையை விரித்து விட்டு, இன்னொரு பக்கம் பணத்தை வாங்கிக்கொண்டு நிர்வாகிகளை நியமிப்பதுதான் சலசலப்பை ஏற்படுத்தும். மதுரை திமுகவினர் ஒட்டியுள்ள நிர்வாகிகள் பதவிக்கான விலைப்பட்டியலில், குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அதாவது கட்சிக்காக காலங்காலமாக உழைத்தவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை. பணம் இருந்தால் மட்டுமே பதவி கிடைக்கும், அதுவும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரிய வந்திருப்பதுதான் திமுகவுக்கு ஷாக் அடிக்கும் விஷயமாக மாறியிருக்கிறது.

Arivalayam 01 updatenews360

மாநகராட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் இன்னும் இதுபோன்ற செய்திகள் அதிகமாக வெளியே வரலாம். இது நிச்சயம் திமுகவுக்கு தலைவலி தரும் சமாச்சாரமாகத்தான் அமையும். ஏனென்றால் கட்சிக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தற்போது பதவிக்கான விலை நிர்ணயம் மூலம் அப்பட்டமாக பொதுமக்களுக்கும் தெரியவந்துள்ளது.

இது மதுரை திமுகவிற்குள் பெரிய அளவில் உட்கட்சி பூசல் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. யாருடைய பெயரும் இந்த போஸ்டரில் இடம் பெறவில்லை என்றாலும் கூட, இதன் பின்னணியில் கட்சி மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற விஷயங்கள் திமுகவில் ஒருபோதும் வெளியே வராது. மிகக் கவனமாக வெளிவராமலும் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அதையும் மீறி இந்த விவகாரம் வெளியே வந்துவிட்டது.

திமுக இளைஞரணி பதவிகள் விற்பனை செய்யப்படுவதாக கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்திருப்பது திமுக தலைமைக்கும் மட்டுமின்றி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 345

0

0