தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா..? முதல்ல உங்க கருத்தை வாபஸ் வாங்குங்க ; மதுரை எம்பி சு.வெங்கடேசன் விளாசல்..!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 1:08 pm
Quick Share

தமிழக வெள்ள பாதிப்பு குறித்து பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமானது. இந்த பாதிப்புகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்துக் கூறாததே காரணம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையத்தில் வானிலையை துல்லியமாக கணிக்கும் உபகரணங்கள் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நவீன வசதிகளுடன் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.

இந்த நிலையில், மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்தி வைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?

அன்றைய தினம் கடும் மழையால் தென்மாவட்டங்களில் பல இரயில்களை ரத்து செய்ய முடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?

தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா? நிதியமைச்சர் அவர்களே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள், எனக் கூறினார்.

Views: - 212

0

0