பாலியல் தொல்லையா… தைரியமா வெளியே சொல்லுங்க… பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 1:14 pm
Quick Share

விருதுநகர் : பெண்கள் காவல்துறை மூலம் தங்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தைரியமாக வெளிக்கொணர வேண்டும் என்று மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தென்மண்டல டி.ஐ.ஜி பொன்னி கலந்து கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது :- நேற்றைய முன்தினம் விருதுநகரில் 22 வயது இளம்பெண் தன்னை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலை 8 பேர் செய்வதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, ஹரிஹரன் என்ற இளைஞர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்ளிட்ட 8 பேரை பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மேல் அந்த இளைஞர்களை கைது செய்துள்ளோம். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த இளம்பெண் எங்களுடைய பராமரிப்பில் உள்ளார். ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூகநலத் துறையின் ஆலோசனை வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ளார், என்றார்

பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் யாரிடம் பழகுகிறோம் என்று தெரிந்து பார்த்து பழக வேண்டும். எந்த வலையிலும் சிக்கி விடக்கூடாது, என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் போது புகாரை மாற்றி அளிக்க கூடிய சூழல் உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிஐஜி பொன்னி பதிலளித்ததாவது :- தமிழ்நாடு காவல்துறையில் அது போன்ற புகாரை மாற்றி வாங்குவது கிடையாது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிக அளவில் கண்காணிக்கிறோம், என்றார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது வேறு ஏதேனும் பெண்கள் புகார் அளித்துள்ளனரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணையில் தெரியவரும், என்றார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெண் காவலர்கள் மூலம் ஒரு புதிய திட்டம் தயார் செய்துள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அந்த இடத்தின் பெயர் மற்றும் திட்டம் குறித்த முழு விளக்கங்களையும் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Views: - 1034

0

0