‘மத ஒற்றுமைக்காக மண்ணில் சாய்ந்த மகாத்மா’ : மதவெறிக்கு எதிராக காந்தி நடத்திய 2வது சுதந்திரப் போராட்டம்!!

Author: Babu
1 October 2020, 9:00 pm
Mahatma_Gandhi_ - updatenews360
Quick Share

சென்னை: அக்டோபர் 2-ஆம் நாள் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினம். இந்தியாவின் இன்றைய தேவை ஒரு மகாத்மா காந்தி என்று அடிக்கடி கூறப்பட்டாலும் மீண்டும் அவர் பிறக்கப் போவதில்லை. ஆனால், அவரது போதனைகள் நம்மோடுதான் இருக்கின்றன. அவரது வாழ்க்கையே ஒரு செய்திதான்.

எந்த மதத்தினரின் கோயில் இடிக்கப்பட வேண்டும், எந்த மதத்தினரின் கோயில் கட்டப்படவேண்டும் என்பதே இந்திய அரசியலின் முக்கியமான பிரச்சினையாகிவிட்ட நிலையில்,
“எந்தக் கோயில் ஆனாலென்ன தெய்வம் தெய்வந்தான்
எந்தத் தெய்வம் ஆனாலென்ன கோயில் கோயில்தான்”
என்ற கண்ணதாசன் வரிகளில் காணப்படும் மத நல்லிணக்கமே, காந்தியாரின் வாழ்க்கை செய்தியாகும். மத நல்லிணக்கத்துக்காகவும், மதவெறியை எதிர்ப்பதற்காகவும் தம்முடைய இறுதிக்காலத்தில் இடைவிடாத போராட்டம் நடத்திய அவர், கடைசியில் மதவெறியால் மண்ணில் சாய்க்கப்பட்டார். மத ஒற்றுமைக்காக தனது உயிரையே தியாகம் செய்தார்.

நாடு பிரிவினைக்கு முன்பு 1946-ஆம் ஆண்டு மிகப்பெரிய மதக்கலவரம் வெடித்தது. எங்கெல்லாம் மதமோதல்கள் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் காந்தி சென்றார். மோசமான மதக் கலவரம் நடந்து கொண்டிருந்த நவகாளிக்கு செல்வதற்காக, 1947 செப்டம்பர் மாதத்தில் கொல்கத்தா நகரத்திற்கு சென்றார். அந்நகரத்திலேயே பல பகுதிகளில் மதக் கலவரம் நடைபெற்றதால், நவகாளிக்கு செல்லாமல் கொல்கத்தாவிலேயே செப்டம்பர் 1 அன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி விட்டார்.

வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவர்கள், காந்திஜியை சந்தித்து “ நீங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டுமா? ஒருவேளை நீங்கள் இறந்து விட்டால் காட்டுத் தீ மிகவும் மோசமான முறையில் பரவும். உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” என கேட்டுக் கொண்டார். “நல்லவேளையாக அதனைப் பார்க்க நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் காந்தி.

இந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜோதிபாசுவும், பூபேஷ் குப்தாவும் காந்தியை சந்தித்து, நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு காந்தி, வீதி வீதியாகச் சென்று இந்து-முஸ்லிம் மக்களை திரட்டி மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்துங்கள்; மத மோதல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று கம்யூனிஸ்ட் தலைவர்கள், வங்காளம் முழுவதிலும் மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினார்கள். மக்களை ஒன்றுபடுத்தினார்கள். கலவர பூமியில் அமைதி தவழ அரும்பாடுபட்டார்கள். அடுத்த சில தினங்களில் கலவரம் ஓய்ந்தது. கொல்கத்தாவில் அமைதி திரும்பியது. ராணுவத்தால் சாதிக்க முடியாததை உண்ணாவிரதப் போராட்டத்தால் காந்திஜி சாதித்ததாக கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டார்.

“மத மோதல் கூடாது; மனிதனை மனிதன் மாய்த்துக் கொள்ளக் கூடாது; மத நல்லிணக்கம் வேண்டும்; மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும்”, என்று உயிரையே பணயம் வைத்து அண்ணல் காந்திஜி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களைச் சேர்த்து பாகிஸ்தான் என்ற நாடாகப் பிரித்துத் தரவேண்டும் என்று முஸ்லிக் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா கோரினார். இதை காந்தி கடுமையாக எதிர்த்தார். ஆனால், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் முஸ்லிம்களுக்கு சமநீதியும், சம உரிமைகளும் கிடைக்காது என்று ஜின்னா கூறினார். பாகிஸ்தான் பிரிக்கப்பட்டால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடியும் என்று பிரிட்டிஷ் அரசும் உறுதியாகக் கூறிவிட்ட நிலையில், காந்தியைத் தவிர ஏனைய தலைவர்கள் பிரிவினைக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

நாட்டின் விடுதலைக்குப் பெரும்பாடுபட்டு பல தியாகங்கள் செய்த காந்தி, சுதந்திர விழாவில் பங்குபெறவில்லை. நாட்டின் சுதந்திரத்தைவிட முக்கியமானதாக மத ஒற்றுமையை மதித்தார். இது குறித்து எழுதியுள்ள அவரது தனிச் செயலாளர் வி.கல்யாணம், “நாடு விடுதலை அடைந்த அன்று நவகாளியில் நாங்கள் காந்தியுடன் தான் இருந்தோம். இந்து, முஸ்லிம் கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். ராட்டை நூற்றார். நேரு, பட்டேல் அழைத்தும் சுதந்திரதின விழாவில் பங்கேற்க மறுத்து, இந்து-முஸ்லிம் ஒற்றுமை தான் எனக்கு முக்கியம். சுதந்திரம் எனக்கு முக்கியமல்ல என்று வரமறுத்து விட்டார். 1947-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தான் நாங்கள் டெல்லி வந்தோம்”, என்று கூறுகிறார்.

ஜனவரி 12, 1948 அன்று, டெல்லியில் நிலவிய மத மோதல்களை நிறுத்தக் கோரி, உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கினார் காந்தி. வைசிராய் மவுண்ட் பேட்டன், காந்தியைச் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரியும், காந்தி கைவிடவில்லை. ஜனவரி 15, 1948 அன்று, காந்தியின் உடல்நலம் அபாயகரத்தை எட்டியது. காந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அமைதிக் குழு உருவாக்கப்பட்டது. மக்களிடையே அமைதி ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தியார் போராடியதால் ஆத்திரமுற்ற மதவெறியர்கள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். ஜனவரி 20, 1948 அன்று, பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது அவருக்கு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கையாகும். அப்போது அவர் ஆபத்தில்லாமல் தப்பித்தார். ஆனாலும், காந்தி தமது இலட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை. தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்திருந்தும் தொடர்ந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் போகும் இடங்களில் எல்லாம் போதித்தார்.

அவருக்கு மிகவும் பிடித்த பாடல்
“ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்
ஈஸ்வர் அல்லா தேரே நாம், ஸப்கோ சன்மதி தே பகவான்” என்பதே.
இப்பாடலின் பொருள்
“ரகு[குலத்தின்] நாயகனான அரசனே, ராமா! ஆதரவற்றவரைக் காப்பாற்றும், சீதையின்[கணவனான] ராமனே! உனது பெயர் ஈஸ்வரன், அல்லா! அனைவருக்கு நல்லெண்ணத்தைக் கொடு, கடவுளே!” என்பதாகும். அவர் சென்ற இடமெல்லாம் இந்தப்பாடலைப் பாடினார்.

டெல்லியின் மெஹ்ரவுலியில் நடந்த இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றார் காந்தி.இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றதால் மதவெறியர்களின் கோபம் இன்னும் அதிகமானது, ஜனவரி 30, 1948 அன்று, மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தியை நாதுராம் கோட்சே என்ற மதவெறியன் சுட்டுக்கொன்றான். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பலப்பல உண்ணாவிரதங்களிலும், சிறைவாழ்விலும் போகாத உயிர் மதவெறியால் போனது. மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் தேசத்தின் தந்தை ரத்த வெள்ளத்தில் மண்ணில் சாய்ந்தார்.

கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் காந்தியின் மத நல்லிணக்க நடவடிக்கைகளை எதிர்த்தே அவரைக்கொன்றேன் என்று கூறினான். அவன் வாக்குமூலத்தில் “நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தை கொதிக்கச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்தவர்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல, டெல்லியில் ஒரு இந்து கோவிலில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் “குர்ஆன்” வாசகங்களைப் படிக்கச் செய்தார். மகாத்மா காந்தி, “முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை” என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது” என்று கூறினான்.

மேலும் “காந்தி நாட்டில் இருந்தால் முஸ்லிம்களின் ஆதிக்கம், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன். முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். ஆனால் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானமே. இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு உள்ளது. இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மம், பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டதுதான்,” என்று கோட்சே கூறினான்.

கோட்சேவின் செயலை ஒரு தனியான பைத்தியக்காரனின் செயலாகப் பார்க்கமுடியாது என்று காந்தியின் முதன்மை சீடரும், நவ இந்தியாவின் சிற்பியுமான நேரு கூறினார். காந்தியின் இரங்கல் உரையில் பேசிய நேரு “நம் வாழ்வின் ஒளி நம்மைவிட்டுச் சென்றுவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துள்ளது. நாடெங்கும் பல ஆண்டுகளாக விஷம் பரப்பப்பட்டு வருகிறது. அது மக்களின் மனங்களின் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நஞ்சான சூழல் நம்மைச் சுற்றிலும் படர்ந்திருக்கிறது. காந்தியாரின் இலட்சியத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் அந்த சூழலை நாம் எதிர்கொள்ளவேண்டும். எதிர்த்துப்போராடி அந்தத் தீமையை வேரோடு பெயர்க்க வேண்டும்” என்றார்.

காந்தி பிறந்த நாளில் அவரது சமாதியில் மலர்வளையம் வைப்பதும் படங்களுக்கு மலர் தூவுவதும் வெறும் சடங்குதான். அவர் எந்த மதவெறியை எதிர்த்துப் போராடித் தமது உயிரையே தியாகம் செய்தாரோ, அந்த மதவெறியைத் உடைத்து நொறுக்க அணி திரள்வதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அன்பெனும் விளக்கை ஏற்றுவோம். அமைதியை என்றும் போற்றுவோம்.

Views: - 65

0

0