நாசர் மனைவி விடுவிப்பா?… நீக்கமா?… தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே கமல் கட்சியில் சலசலப்பு

21 April 2021, 10:13 pm
Quick Share

நடிகர் நாசர் பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நடிகர் கமல்ஹாசனுடன் நாயகன்,தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், அவ்வை சண்முகி உள்பட ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களும் ஆவர். 2015-ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிட்டபோது, கமல்ஹாசன் நடிகர் நாசருக்கு தனது ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்தார். அந்த தேர்தலில் நாசர் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு அவர்கள் இருவருடைய நட்பும் இன்னும் ஆழமாகிப் போனது.

நடிகர் கமல்ஹாசன் 2018 பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது தனது கட்சியில் நாசருக்கு முக்கிய பதவி அளிப்பதாக இருந்தது. ஆனால் அது அரசியல் சாயம் பூசப்பட்டு விடும் என்பதால் அந்தப் பதவியை நாசர் ஏற்க மறுத்து விட்டார்.ஏற்கனவே நடிகர் சங்கத்திலும் தலைவர், கமல் கட்சியிலும் முக்கிய பொறுப்பு என்றால் தன்மீது தேவையற்ற விமர்சனங்கள் வரும் என்பதை உணர்ந்த நாசர் அதை விரும்பவில்லை. மேலும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் தன்னால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத சூழல் உருவாகும் என்பதை உணர்ந்த அவர்,

தனக்கு பதிலாக மனைவி கமீலாவை மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து செயல்படுவதற்கு வழிகாட்டினார். இதைத் தொடர்ந்தே கமீலா நாசருக்கு தனது கட்சியில், கட்டமைப்பு பிரிவின் மாநில செயலாளர் பதவியை கமல் வழங்கினார். குடும்பத் தலைவியான கமீலா தனது கணவர் நாசர், நடிகர் கமலுக்கு அளித்த வாக்குறுதியின் காரணமாகவே அரசியலில் ஈடுபட நேர்ந்தது என்று சினிமா வட்டாரத்தில் பேச்சும் உண்டு. இந்த நிலையில்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை வேட்பாளராக கமீலா நிறுத்தப்பட்டார்.

இந்த தேர்தலில் சுமார் 93 ஆயிரம் ஓட்டுகளும் பெற்று அனைவரையும் கமீலா ஆச்சரியப்படுத்தினார். இதனால் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு கமல்ஹாசன் சென்னையில் துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் கமீலா விருகம்பாக்கம் அல்லது மதுரவாயல் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்குமாறு மக்கள் நீதி மய்யத்திடம் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இங்கேதான் கமலுக்கும், நாசரின் மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்படத் தொடங்கியது, என்கிறார்கள்.

துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடும்படி கமல் வற்புறுத்தியதாகவும் அதை ஏற்க கமீலா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எதற்காக அவர் இந்த தொகுதிகளில் போட்டியிட மறுக்கிறார் என்பது தெரியாமல் குழப்பமடைந்த கமல்ஹாசன், கமீலா விரும்பி கேட்ட விருகம்பாக்கதையும் ஒதுக்கவில்லை. மதுரவாயலையும் கொடுக்கவில்லை. மாறாக விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகன் போட்டியிட மக்கள் நீதி மையம் வாய்ப்பு வழங்கியது. அதேநேரம் மாநில செயலாளரான கமீலா, கவிஞர் சினேகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டதாக தெரிகிறது. அர

இதுபற்றி சினேகன் நடிகர் கமலிடம் முறையிட்டு இருக்கிறார். இந்தப் பரபரப்பு சூழலில்தான், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா விடுவிக்கப் பட்டிருக்கிறார். இன்னொரு பக்கம், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி விட்டதாக கூறி மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து கமீலா நீக்கப்பட்டு உள்ளார் என்ற செய்திகளும் உலா வருகின்றன. இதுபற்றி கமீலா செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடும்பத்தையும், அரசியலையும் என்னால் ஒரே நேரத்தில் கவனித்துக்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவேதான் கட்சியிலிருந்து நானாகவே விலகிக் கொண்டேன்.

ஆனால் என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும், தேர்தல் பிரச்சினையால் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜினாமா செய்ததாகவும் தவறான தகவல்கள் பரவுகின்றன. இது எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சளையும் அளிக்கிறது. தேர்தல் நடப்பதற்கு முன்பே என்னை கட்சியிலிருந்து விடுவிக்குமாறு கோரி கமல்ஹாசனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருந்தேன். அவர்தான் தேர்தல் முடியும் வரை சற்று பொறுமையாக இருங்கள். பின்னர் இதுகுறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று உறுதி கூறியிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் நானும் அமைதி காத்தேன்.

இப்போது தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. எனினும் எனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்தேன். இதைத்தொடர்ந்தே என்னை பொறுப்பில் இருந்து கட்சி தலைமை விடுவித்து இருக்கிறது. கமல்ஹாசனுடன் என் குடும்பதினருக்கும், எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அது எப்போதும்போல் தொடர்ந்து நீடிக்கும். அதேநேரம் அரசியலில் இருந்தாலும், சரி, இல்லாவிட்டாலும் சரி எனது மக்கள் பணி என்றென்றும் தொடரும்” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து நாசரின் மனைவி கமீலா விடுவிக்கப்பட்டது தொடர்பாக வேறுசில தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தனது கணவர் நாசருக்கு எதிராக 2015-ல் நடிகர் சங்கத் தேர்தலில் தீவிரமாக செயல்பட்ட சரத்குமாரை நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே கமீலா ராஜினாமா செய்ததாகவும் கோடம்பாக்கம் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
இன்னொரு பக்கம் விரைவில் கமீலா தனது கணவர் நாசருடன், திமுகவில் சேருவார் என்ற தகவலும் இறக்கை கட்டி பறக்கிறது.

Views: - 302

0

0