அரசியல் புயல் வீசும் மார்ச் 7 : பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்!!!

3 March 2021, 9:43 pm
March 7 - updatenews360
Quick Share

மார்ச் -7

தமிழக அரசியலில் புயல் மையம் கொண்டிருக்கும் நாள் இது.
அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அன்று நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்பார்ப்பும் அரசியல் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அன்று மீண்டும் தமிழகம் வருகிறார். அதற்குள் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்து யார் யாருக்கு எந்த தொகுதிகள்? என்பதும் இறுதியாகி தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக, பாமக, பாஜக,தேமுதிக, தமாகா ஆகியவை தயாராகிவிடும். அதிமுக கூட்டணியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதற்காகவே, அமித்ஷா 2-வது முறையாக தமிழகம் வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

Amit_Shah_UpdateNews360

அதே நாளில், திருச்சியில் லட்சிய பிரகடனம் என்கிற பெயரில் திமுக ஒரு தேர்தல் மாநாட்டை நடத்துகிறது. இதில் திமுக அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக விசிக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே திருச்சியில் மார்ச் 14-ம் தேதி ஒரு பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கு திமுக தயாராகி வந்தது. சுமார் 10 லட்சம் பேர் வரை கூடுவதற்கு ஏற்றவகையில் மாநாட்டு அரங்கமும் ரெடியானது.

இந்த மாநாட்டுக்காக திமுக செலவு செய்த தொகையே 60 கோடி ரூபாய்களை தாண்டியது என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் ‘ஹைடெக்’ ஆக மாநாட்டை நடத்துவதற்கு திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

ஆனால் தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதால், இந்த திருப்புமுனை மாநாட்டை நடத்துவதில் திமுகவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க இருக்கும் நிலையில், மாநாட்டை நடத்தினால் தேர்தல் பிரச்சாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று திமுக கருதியதால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

Stalin Bday Trending -Updatenews360

திட்டமிட்டபடி இந்த மாநாடு நடக்காமல் போனதில் திமுகவுக்கு பெருத்த ஏமாற்றம்தான். தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் திமுகவுக்கு ஏற்பட்ட மிகப் இழப்பு என்றே இதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த மாநாட்டின் மூலம் தனது முழு வலிமையையும் தமிழக மக்களுக்கு காண்பிக்க திமுக திட்டமிட்டிருந்தது.

என்றபோதிலும், திருச்சியை ‘சென்டிமெண்ட்’ நகராக கருதும் திமுக வருகிற 7-ம் தேதி அதே இடத்தில் லட்சிய மாநாட்டை நடத்துவதற்கு முடிவுசெய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த மாநாட்டில் திமுகவின் வேட்பாளர் பட்டியலும் கவர்ச்சியான தேர்தல் அறிக்கையும் வெளிடப்பபடலாம் என்று பலத்த எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கட்சியில் மிக மூத்த தலைவர்களுக்கு சீட் கிடைக்குமா? என்பது அப்போது தெரிய வரலாம். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள அத்தனை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Kamal Sellur Raju-Updatenews360

இதே மார்ச் 7-ம் தேதி நடிகர் கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று தெரிவித்திருக்கிறார். அனேகமாக அது முதல் பட்டியலாக இருக்கலாம். அந்தக் கட்சியின் வேட்பாளர்கள், எங்கெங்கு போட்டியிடுவார்கள் என்பதை அறிந்துகொள்ள
அதிமுகவும், திமுகவும் மிகுந்த ஆர்வம் காட்டும் என்பதும் நிச்சயம்.

தனது கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணையும் என்று கமல் கூறி இருக்கிறார். அந்த எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. புதிய கட்சிகள் எவை எவை என்பது பற்றி மார்ச் 7-ம் தேதி கமல் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மார்ச் 7-ம் தேதியை குறி வைத்திருக்கிறார். அன்று சென்னை ராயப் பேட்டையில் நடக்கும் தனது கட்சி மாநாட்டில் தமிழகத்தில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

Seeman 01 updatenews360

234 தொகுதிகளையும் சரிசமமாகப் பிரித்து அவற்றில் ஆண்-பெண் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக சீமான் கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் தமிழக தேர்தல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் இதுவரை இத்தனை பெண் வேட்பாளர்களை நிறுத்தியது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அவருடைய கட்சியின் மாநாடும் அரசியல் ஆர்வலர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இது தவிர சமீப காலமாக தடாலடி அரசியல் நடத்தி வரும் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும். அதே மார்ச் 7-ந் தேதி இந்த கட்சிகளுக்கு போட்டியாக பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் அரசியல் ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சில சிறு சிறு கட்சிகளை தன் கூட்டணிக்குள் வளைத்துப் போட்டு வலுவான கூட்டணி அமைக்க முயன்று வரும் தினகரன் 234 தொகுதிகளுக்கும் தனது கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பை அன்றைய தினம் வெளியிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

dinakaran- updatenews360

மேலும் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதையும், தேனி மாவட்டத்தில் தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியையும் அன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இன்று வரை திரைமறைவு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சசிகலா, அன்று தன் அக்காள் மகன் டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் துணிந்து அறிவிக்கும் நாளாகவும் மார்ச் 7-ம் தேதி இருக்குமென்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் மார்ச் 7-ம் தேதி தமிழக அரசியலில் புயல் மையம் கொள்ளும் என்பது நிச்சயம்.

அது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஏப்ரல் 6-ந் தேதி தேர்தலில் பதிவான ஓட்டுகளை மே 2-ந் தேதி எண்ணி முடிக்கும் போதுதான் தெரியும்.

Views: - 44

0

0