திருமாவின் முகத்திரையை கிழித்த மாயாவதி?… எங்கள் ஆதரவு முர்முவுக்குத்தான்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 2:01 pm
Thiruma and Mayawati - Updatenews360
Quick Share

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மாயாவதி!!

அதுவும் தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவனுக்கு இது பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏனென்றால் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான சமூக நீதி, பெண்ணுரிமை, கல்வி, முன்னேற்றம் பற்றி பேசும் திருமாவளவன் எதிர்கட்சிகளின் வேட்பாளர் குறித்து 10 நாட்களுக்கு முன் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

திருமா கோரிக்கை நிராகரிப்பு

அதில், “இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இந்நேரத்தில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும். எனவே, எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராகக் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தவேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்ட கிறிஸ்தவ வேட்பாளர் சங்மாவை நீங்கள் ஆதரிக்கவில்லையே, ஏன்? என்ற தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயண் திருப்பதியின் கிடுக்குப்பிடி கேள்விக்கு திருமாவளவன் பதிலே சொல்ல முடியவில்லை.

யஷ்வந்த் சின்கா வேட்பாளர்

இந்த நிலையில்தான் கடந்த 21ம் தேதி டெல்லியில் நடந்த 11 எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இக் கூட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவனின் கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து அவர் கூறும் போது, “தேசத்துக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் பேராபத்து சூழ்ந்துள்ள பெருங்கேடான நிலையில் கே.ஆர்.நாராயணன் போன்ற துணிவுள்ள ஒருவர் குடியரசுத் தலைவராக வேண்டும். கிறிஸ்தவர் ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழிய கோரினோம். எனினும், யஷ்வந்த் சின்கா பொதுவேட்பாளர் என முடிவெடுக்கப்பட்டது” என்றார்.

அவருடைய கோரிக்கை ஏற்கப்படாமல் அப்படியே நிராகரிக்கப்பட்டுவிட்டது
என்பதை மழுப்பலாக திருமாவளவன் கூறியதாகவே இதை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.

திரௌபதி முர்முவுக்கு பெருகும் ஆதரவு

மேலும் கடந்த 21ம் தேதி மாலையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தின் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண்மணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதை அறிந்ததும்
நடுநிலையாக இருந்து வந்த பிஜு ஜனதா தளம், ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிகள் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தன.

இது எதிர்க்கட்சிகளுக்கு பெருத்த அதிர்ச்சி தருவதாக அமைந்தது. இந்த அதிர்வலையே இன்னும் ஓயாத நிலையில்தான் பாஜகவுடன் இணங்காமலும், எதிர்க்கட்சிகளின் அணியிலும் சேராமல் தனித்திருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ஜூலை18-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்துள்ளார்.

திருமாவை வெளுத்து வாங்கிய மாயாவதி

அவர் கூறும்போது,”பழங்குடி சமூகம், கட்சியின் ஓர் அங்கமாக இருப்பதை மனதில் வைத்து, வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிக்க பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகவோ எடுக்கப்பட்டது, அல்ல.

திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஓர் பழங்குடியின பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்பதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவு. அதுமட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான முடிவுகளைத்தான் நாங்கள் எடுக்கிறோம். பட்டியலினத்தவருக்குத் தலைமை தாங்கும் ஒரே தேசிய கட்சி என்றால் அது பகுஜன் சமாஜ் மட்டும்தான். நாங்கள் பாஜக அல்லது காங்கிரசைப் பின்பற்றும் கட்சியுமல்ல, தொழிலதிபர்களுடன் தொடர்புடைய கட்சியுமல்ல “என்று குறிப்பிட்டார்.

மம்தாவை கிண்டல் செய்த மாயாவதி

மேலும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தை கடுமையாக விமர்சித்த மாயாவதி, “முதல் ஆலோசனைக் கூட்டத்துக்கு சில தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை மட்டுமே மம்தா அழைத்தார். அடுத்து சரத் பவாரும் பகுஜன் சமாஜ் கட்சியை கூட்டத்துக்கு அழைக்கவில்லை. இவர்கள், எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி செய்வதாக வெறும் பாசாங்கு மட்டுமே காட்டுகின்றனர்” என்று கிண்டல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 எம்பிக்களும் 5 எம்எல்ஏக்களும் உள்ளனர். இவர்களின் ஓட்டு மதிப்பு சுமார் 8 ஆயிரம் ஆகும்.

“தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்று கூறி வரும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு மாயாவதியின் இந்த அறிவிப்பு வேப்பங்காய் போல் கசந்துள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக மாயாவதி கூறும் காரணங்கள் திருமாவளவன் அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்து இருப்பதுதான்.

ஆதரவை மாற்றி அளித்த திருமா

இத்தனைக்கும் பட்டியலின மக்களின் நலனுக்கு தலைமை தாங்கி பாடுபடும் ஒரே கட்சி நாங்கள்தான் என்று மாயாவதி உறுதியாக கூறுகிறார். அதனால் எங்களது கட்சியும் பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனுக்கான கட்சிதான் என்பதை உறுதிப்படுத்த திருமாவளவன் முர்முவை ஆதரித்திருக்கவேண்டும்.

ஏனென்றால் அவரும் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தன்னையும், விசிகவையும், தேசிய அளவில் முன்னிலைப்படுத்தி வருகிறார்.

ஆனாலும் கூட திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக பாஜக கூட்டணியின் வேட்பாளரான முதல் பழங்குடியின பெண்ணுக்கு ஆதரவு தர திருமாவளவனின் மனம் மறுக்கிறது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்து பின்னர் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவிய யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கிறார்.

மௌனத்தில் திருமாவளவன்

கே ஆர் நாராயணன், திருமணத்திற்கு பிறகு மியான்மரின் கிறிஸ்தவ மனைவியான டின்ட் டின்ட் என்ற உஷா விருப்பத்தின் பேரில் தன் இறுதி நாட்களில் கிறிஸ்தவத்தை பின் தொடர்ந்தார் என்று கூறப்படுவதும் உண்டு. அதனால்தான் இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் திருமாவளவன் அவருடைய பெயரை குறிப்பிட்டு இருக்க வாய்ப்புள்ளது.

எனினும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்ற தனது வலுவான கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்முவைத்தான் திருமாவளவன் ஆதரித்து இருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்ய அவர் தவறி விட்டார். அதனால் பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் மட்டுமே போராடுகிடுகிறோம்.
எங்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி உண்டு என்று இனியும் அவர் அளந்து விடுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.

இதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் அவருடைய பிரச்சார பயணத்திற்கு இனி எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லை. அவருடைய கூட்டணியில் முன்னணி வகிக்கும் இன்னொரு பிரதான கட்சிக்கும் இது பொருந்தும். ஏனென்றால் நீண்டகாலமாக அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, பெண்ணுரிமை, முன்னேற்றம் குறித்து மிகுந்த அக்கறையோடு பேசி வருகிறார்கள். அவர்களின் தாய் கழகமோ தற்போது இந்த விஷயத்தில் மிகுந்த மௌனம் சாதிக்கிறது.

அதேநேரம் சமூகநீதியை தொடர்ந்து நிலைநாட்டிவரும் கட்சியாக பாஜக திகழ்வது வெளிப்படையாகவே தெரிகிறது. பாஜக ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியரான ஏபிஜே அப்துல் கலாம், பட்டியலினத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த், தற்போது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு ஆகியோரையே குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

தவிர 2012 குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட கிறிஸ்தவ வேட்பாளரான பி.ஏ. சங்மாவையும் ஆதரித்தது.

100% திரௌபதிக்கே வெற்றி

பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் பழங்குடியின வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில் ஜார்கண்டில், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்தி வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் மாயாவதி கூறிய அதே காரணங்களுக்காக திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிக்க முன்வந்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முர்முவின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகிவிட்டது.

எதிர்க்கட்சி வேட்பாளர் எத்தனை ஓட்டுகள் வாங்குவார் என்பதுதான் ஒரே கேள்வியாக உள்ளது. எனவே இது திருமாவளவனுக்கு கிடைக்கப்போகும் அவமானமாகவே பார்க்கப்படும். அவருடைய முகத்திரையை மாயாவதி கிழித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 500

0

1