மேயர் தேர்தல் நேரடியா, மறைமுகமா…? நகர்ப்புற உள்ளாட்சியில் சஸ்பென்ஸ்..!!!
Author: Babu Lakshmanan30 October 2021, 12:04 pm
தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி என்று இருவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டின் இறுதியில் நடக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் மிகவும் தாமதமாகவே நடந்தது.
முதலில் 2019 டிசம்பர் மாத இறுதியில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் எஞ்சிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.
கறார் உத்தரவு
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலை நடத்துவதற்கு திமுக அரசு
6 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கேட்டது. ஆனால் 4 மாதம் மட்டுமே கால அவகாசம் அளித்த கோர்ட் டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கறார் உத்தரவும் பிறப்பித்தது.
தமிழகத்தில் இப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்காமல் வெவ்வேறு காலகட்டங்களில் அங்கங்கே கொஞ்சம் பிச்சு போட்ட மாதிரி நடப்பது இதுதான் முதல் முறை.
குற்றச்சாட்டு
2019-ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது ஆட்சியில் இருந்த அதிமுக கூட்டணி 42 சதவீத இடங்களையும், எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணி 45 சதவீத இடங்களையும் கைப்பற்றியது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் திமுக கூட்டணி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99 சதவீத இடங்களையும், ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் தேர்தலில் 76 சதவீத இடங்களையும் கைப்பற்றியது.
திமுக கூட்டணி இவ்வளவு சதவீத இடங்களை கைப்பற்றியதற்கு முக்கிய காரணம் அது எந்த பிளவுமின்றி போட்டியிட்டதுதான்.
ஆனால் 2019-ல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தேமுதிக போன்றவை இம்முறை தனித்தனியாக போட்டியிட்டன. சில மாவட்டங்களில் சில பகுதிகளில் அதிமுகவும் பாஜகவும் கூட தனித்தனியே களம் கண்டன. இதனால் அதிமுகவுக்கு மட்டுமின்றி, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளுக்கும் 9 மாவட்ட ஊரக ஊராட்சி தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
திமுக முறைகேடுகள் மூலமாக வெற்றி பெற்றதாக அதிமுக குற்றம்சாட்டியும் வருகிறது.
இதனால்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை சூட்டோடு சூடாக நடத்தி முடிக்க திட்டமிட்டு திமுக காய்களை நகர்த்தி வருகிறது.
டிசம்பருக்குள் தேர்தல்
மாநிலம் முழுவதும் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளும் இவற்றில்
12 ஆயிரத்து 820 வார்டுகளும் இருந்தன. அண்மையில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கரூர், கும்பகோணம், சிவகாசி ஆகிய 6 நகரங்கள் புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதனால், மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து இருக்கிறது.
அதேபோல பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், குன்றத்தூர், நந்திவரம் – கூடுவாஞ்சேரி, மாங்காடு, திட்டக்குடி, பள்ளப்பட்டி உள்ளிட்ட 28 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பேரூராட்சிகளின் எண்ணிக்கை குறைந்து நகராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால், அடுத்த மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டு உள்ளது.
நேரடி தேர்தல்
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை ஆளும் திமுக அரசு தொடங்கி இருக்கிறது. 1996-ல் திமுக ஆட்சியின்போது மாநகராட்சி மேயர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்தனர். அதற்கு முன்பு வரை கவுன்சிலர்கள்தான் மேயரை மறைமுக தேர்தல்
மூலம் தேர்ந்தெடுத்து வந்தனர். 1996-ல் சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயர் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்தது. 2001-ம் ஆண்டும் மேயர்கள் நேரடியாகவே தேர்வு செய்யப்பட்டனர்.
2006-ல் திமுக ஆட்சியின் போது மாநகராட்சி மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது. 2011-ல் மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது.
2016-ல் அதிமுக அரசு மேயர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்ய சட்ட திருத்தம் கொண்டு வந்தது. எனினும் கோர்ட் வழக்கு காரணமாக 2019-ம் ஆண்டுதான் முதல்கட்டமாக
27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலே நடத்தப்பட்டது.
அதிமுக தீவிரம்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அதிக இடங்களை கைப்பற்ற முடியாமல் போனாலும் கூட கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு,வேலூர், ஓசூர், திண்டுக்கல்,சிவகாசி ஆகிய மாநகராட்சிகளை கைப்பற்றிவிடவேண்டும் என்கிற உத்வேகத்துடன், அதிமுக செயல்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், நகரங்களில் இழந்த செல்வாக்கை மீட்க திட்டமிட்டு அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அதேநேரம் சட்டப் பேரவை தேர்தல்போல கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதால் பல முக்கிய அமைச்சர்கள் இப்போதே கோவை, சேலம், ஈரோடு திருப்பூர் நகரங்களை முற்றுகையிட்டு உள்ளனர். மற்ற மாநகராட்சிகளை மிக எளிதில் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் திமுக உள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாமக, பாஜக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக கட்சிகளும்
தங்களின் உண்மையான பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும்.
இந்த முறை..?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பதால் மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்குமா? நேரடித் தேர்தல் நடக்குமா?…என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரு மெகா தேர்தல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் நமது நாட்டிலேயே அதிகமான நகர்ப்புறக் கட்டமைப்பை கொண்ட மாநிலம் தமிழகம்தான். சுமார் 53 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்களில் 3 கோடியே 28 லட்சம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் மாநகராட்சி மேயர் என்பது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனால் மீண்டும் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரம் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட்டால் யாரை மேயர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி உருவாகலாம். மேலும் வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட்டணிக் கட்சியினர் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள் என்ற எண்ணம் திமுகவிடம் உள்ளது. மறைமுக தேர்தல் நடத்தப்பட்டால் இந்தப் பிரச்சினைக்கு இடம் இருக்காது என்றும் அக்கட்சி கருதுகிறது. எனவே மறைமுக தேர்தல் நடத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதில் ஆளும் திமுக அரசின் முடிவுதான் இறுதியானது என்பதால் அதன்படியே மாநில தேர்தல் ஆணையம் நேரடி தேர்தலா? மறைமுகமாக தேர்தலா? என்பதை அறிவிக்கும். அதற்கான விடை இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். ஏனென்றால் தமிழகத்தின் அத்தனை மண்டலங்களிலும் இதற்கான ஆலோசனை கூட்டத்தை தமிழக தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துவிட்டது” என்று சஸ்பென்ஸ் வைத்தனர்.
அரசியல் கட்சிகளுக்கு அடுத்த அக்னிப் பரீட்சையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
0
0