அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம் !!

15 September 2020, 2:22 pm
EPS - updatenews360
Quick Share

முதலமைச்சர் பழனிசாமி தாக்கல் செய்த மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கான மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையின் தரத்தை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோத வழிவகை செய்கிறது.

முதலமைச்சர் பழனிசாமி தாக்கல் செய்த இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.