இன்னும் இணைப்பு நாடகம் எதுக்கு…? வைகோவை விளாசும் நிர்வாகிகள்…!

Author: Babu Lakshmanan
2 May 2023, 5:05 pm
Quick Share

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சகட்டத்தையும் தாண்டிவிட்டது.
துரைசாமியை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று குரல்களும் எழத் தொடங்கிவிட்டன.

தாய்க் கட்சியான திமுகவுடன் மதிமுகவை இணைப்பதற்கு இதுதான் சரியான தருணம். இதற்கு மேலும் இழுத்துக் கொண்டே போவது நல்லதல்ல என்று சில தினங்களுக்கு முன்பு துரைசாமி ஒரு சரவெடியை கொளுத்தி போட்டார்.

இது தொடர்பாக வைகோவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி மீண்டும் திமுகவிற்கே சென்று விட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியுள்ளது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில் துரை வைகோவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்கும் படி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. எனவே மதிமுகவை திமுகவோடு இணைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

திருப்பூர் துரைசாமியின் கடிதம் அத்தனை ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வைகோ ரொம்பவே அதிர்ந்துதான் போனார்.
அவர் மனம் நொந்து போனதும் உண்மை.

இதற்கு முன்பு இதுபோல மதிமுகவில் மூத்த நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி இருந்தாலும் கூட சமரச பேச்சு நடத்தி அவர்களை அமைதிப்படுத்தி விடுவது வைகோவின் வழக்கம். ஆனால் இப்போது வெடித்துள்ள விவகாரம் அவருடைய மகன் துரை வைகோவால் உருவானது என்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் வைகோ திணறுவது வெளிப்படையாகவே தெரிகிறது.

இப்படி கூறுவதற்கு முக்கிய காரணம் திருப்பூர் துரைசாமியின் வேண்டுகோளுக்கு வைகோவை முந்திக்கொண்டு அவருடைய மகனும் மதிமுக தலைமைக் கழக செயலாளருமான துரை வைகோ பதிலளித்ததுதான். “கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சிக்கிறார்” என்று அவர் காட்டமாக குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்தே வைகோ நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார். அதில் “மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. விரைவில் பொதுக்குழு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 70 சதவீத அளவுக்கு மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. எந்த இடத்திலும் சிறு சலசலப்பும் இல்லை.  இந்தநிலையில் கட்சிக்குள் குழப்பம் இருப்பது போல் இல்லாத செய்தியை செய்தியாக்க சிலர் முயற்சித்தார்கள். அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது.

எனவே இந்த சூழ்நிலையில் மதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு முன்பை விட வேகமாக செல்ல நடவடிக்கை எடுக்கும். இரண்டு வருடங்களுக்கு கட்சிக்கு வராமல் தற்போது திருப்பூர் துரைசாமி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்றால் நல்ல நோக்கத்திலா இருக்கும்? கட்சியில் 99.9 சதவீதம் பேருக்கு திமுகவோடு கட்சியை இணைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக அலட்சியப்படுத்துகிறேன் நிராகரிக்கிறேன். இனி அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்” என கொந்தளித்து உள்ளார்.

இதற்கு உடனடியாக திருப்பூர் துரைசாமி பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது “பொதுச் செயலாளர் வைகோவுக்கு இதுவரை 6 கடிதங்கள் எழுதி உள்ளேன். ஆனால் இதுவரை எந்த கடிதங்களுக்கும் பதில் வரவில்லை. வைகோவுக்கு மட்டுமே நான் பதில் சொல்லுவேனே தவிர வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. கட்சியில் நடந்த தேர்தல் அனைத்தும் பினாமி தேர்தலாகவே நடந்துள்ளது. சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை.

மதிமுக தற்போது பலவீனப்பட்டுள்ளது. மதிமுக என்ற கட்சிக்கு எதிர்காலமே இல்லை. எனவே இப்போதே திமுகவுடன் இணைத்து விட்டால் கட்சியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். தற்போது வரை மதிமுக அவைத்தலைவராக உள்ளேன். புதிய கட்சி தொடங்கவோ, வேறு எந்த கட்சியில் சேரும் எண்ணமோ எனக்கு இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பேன். தற்போது எந்த அரசியல் கட்சியிலும் நியாயத்தை பேச முடியவில்லை. பேசினால் எதிர்ப்பு வருகிறது” என்று பொங்கி இருக்கிறார்.

“யாருமே இல்லாத கடையில் இவர்கள் ஏன் டீ ஆற்றுகிறார்கள்?…என்று கேட்பது போல கட்சியின் பொது செயலாளரும், அவைத் தலைவரும் எதற்காக இப்படி திடீரென மோதிக் கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. மதிமுகவில் இன்று கட்சிக்கென பெரிய அளவில் தொண்டர்கள் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும்.
மதுரை,விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் சில ஆயிரம் பேர் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களும் இன்னும் எவ்வளவு நாளைக்கு கட்சியில் நீடிப்பார்கள் என்பதை உறுதியாக சொல்ல இயலாது” என்று மதிமுக நிர்வாகிகளில் சிலர் கவலையோடு கூறுகிறார்கள்.

‘2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்தபோது நான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் என்று வைகோ வீர வசனம் பேசினார். ஆனால் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை முன்கூட்டியே உணர்ந்தாரோ, என்னவோ கடைசியில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அந்தர் பல்டி அடித்தார். அப்போதே விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நல கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்பது அவருக்கு தெரிந்துவிட்டது. அதுவே அந்த தேர்தலிலும் நடந்தது.

அடுத்து எந்த பக்கம் சாய்ந்தால் அரசியலில் நல்ல எதிர்காலம் நமக்கு கிடைக்கும் என்று நினைத்து 2017ல் திமுக கூட்டணிக்கு தாவினார். ஸ்டாலினை முதலமைச்சராக்குவேன் என்று கருணாநிதியிடம் சபதமும் செய்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய பலவீனம் மேலும் வெளிப்பட்டது. ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட கணேசமூர்த்தி திமுகவின் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்தது வைகோவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ஏனென்றால் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரத்தில் மட்டுமே திமுக சின்னத்தில் நின்றது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

இதைவிட ஒரு பெரிய கூத்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடந்தது. திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக அந்த தொகுதிகள் அனைத்திலும் திமுக சின்னத்தில்தான் நின்றது. அதேநேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவிடம் ஆறு தொகுதிகளை பெற்று பானை சின்னத்தில் போட்டியிட்டது. இரண்டு கட்சிகளுமே தலா நான்கு தொகுதிகளில் வெற்றி கண்டன.

அதாவது திருமாவளவன் தனது நிலைப்பாட்டில் விடாப் பிடியாக இருந்து திமுக தலைமையிடம் நாங்கள், எங்களது கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அடித்து சொல்லிவிட்டார். ஆனால் வைகோவால் எங்களது பம்பரம் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்று வாதாட முடியவில்லை. தெளிவான, உறுதியான முடிவை எடுக்க முடியாமல் அவர் சொதப்பியும் விட்டார்.

அப்போதே திமுகவிடம் வைகோ மதிமுகவை அடமானம் வைத்து விட்டதாக எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அதைவிட மிகப்பெரிய கொடுமை எனது மகன் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டான் என்று கூறி வந்த வைகோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாடகத்தை நடத்தி மகனை கட்சியின் தலைமைக் கழக செயலாளராகவும் ஆக்கி விட்டார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டாதது, திமுகவில் இருந்தபோது வாரிசு அரசியலே கூடாது என்று முழக்கமிட்டு வெளியேறிய வைகோ தனது மகனை அரசியல் வாரிசாக்கி இருப்பது என பல விஷயங்களில் மிகவும் ‘வீக்’ ஆகி விட்டார்.

இதனால்தான் கட்சியின் மூத்த தலைவர்கள் வைகோவின் உணர்ச்சிகர பேச்சை நம்பி திமுகவை விட்டு வெளியேறாமல் இருந்து இதே 30 ஆண்டு கால கடும் உழைப்பை அங்கு காட்டிஇருந்தால் நாமும் இன்று ஒரு அமைச்சராகவோ, எம்பி ஆகவோ இருந்திருப்போமே அத்தனையும் வீணாகிப் போய் விட்டதே என்று வேதனைப்படுகின்றனர்.

அதேபோல மதிமுகவுக்கு சிறிது கூட எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்துள்ள இன்றைய இளைஞர்கள் எங்கள் கட்சியை கண்டாலே காத தூரம் ஓடும் நிலைமையும் உருவாகிவிட்டது. அதை உணர்ந்துதான் திருப்பூர் துரைசாமி இன்னும் ஓரிரு ஆண்டுகள் காத்திருக்காமல் திமுகவுடன் கட்சியை இணைக்க இதுதான் சரியான நேரம் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இதில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.

ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகன் துரை வைகோவுக்கு எப்படியும் ஒரு எம்பி சீட்டை வாங்கி விட வேண்டும் என்பதற்காகத்தான் கட்சியை திமுகவுடன் இணைப்பதற்கு வைகோ தயங்குகிறார். ஏனென்றால் இப்போதே இணைத்து விட்டால் மகனுக்கு ஒரு தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டுப் பெறுவது மிகவும் சிக்கல் ஆகி விடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்” என்று அந்த மூத்த நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இதுவும் யோசிக்க கூடிய ஒன்றாகவே தெரிகிறது!

Views: - 249

0

0