அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் : 16ம் தேதிக்குள் பதிலளிக்க ஆளுநரின் செயலருக்கு உத்தரவு

Author: Babu
14 October 2020, 6:05 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை : மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக வரும் 16ம் தேதிக்குள் பதிலளிக்க ஆளுநரின் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதனடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோத வழிவகை செய்கிறது.

இதனிடையே, தமிழக அரசு அறிவித்துள்ளபடி, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு நடப்பாண்டு முதலே அமலுக்கு வருமா..? என்ற கேள்வி எழுந்து வந்தது. இது தொடர்பாக வழக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்டது.

இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதா, ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாகவும், இது குறித்து முடிவெடுக்க 2 வார கால அவகாசம் வேண்டும் என்று ஆளுநரின் செயலர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ படிப்பு சம்பந்தப்பட்டுள்ளதால் 2 வாரம் அவகாசம் என்பது அதிகம் என்றும், எனவே, வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என ஆளுநரின் செயலருக்கு உத்தரவிடப்பட்டது.

Views: - 37

0

0