மேகதாது விவகாரம்… டெல்லி குழுவில் எங்களைப் புறக்கணிப்பதா… ? கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்

15 July 2021, 5:20 pm
Farmers upset - updatenews360
Quick Share

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து வரும் கர்நாடகாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அனைத்துக் கட்சி குழு

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 12-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்படுகை மாநிலங்களிடம் அனுமதி பெறாமல், மேகதாதுவில் எந்த கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசின் திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

all party meet - updatenews360

மேலும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த தீர்மானங்களை டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஆகியோரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையின் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பாக வழங்க முடிவும் செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகள் புறக்கணிப்பு

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மத்திய அமைச்சரை சந்திப்பதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூட அழைத்து செல்லப்படவில்லை என்பதுதான்.

குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஒரு சிலரையாவது அழைத்துச் சென்றிருக்கலாம். ஏனென்றால் மேகதாது அணை கட்டுவதால், முதலில் பெரும் பாதிப்பை சந்திப்பது, டெல்டா பகுதி விவசாயிகள்தான். அதனால் தங்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்ற மனக்குறை பரவலாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் காணப்படுகிறது.

ஏற்கனவே, தமிழக அரசு கடந்த 12-ம் தேதி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்கவிருக்கும் டெல்லி பயணத்திலும் தமிழக அரசு, தங்களை புறக்கணித்து விட்டதாக அவர்கள் வேதனைப்படுகின்றனர்.

குடிநீர் திட்டங்களும் பாதிக்கும்

இதுதொடர்பாக தஞ்சை, திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கூறும்போது, “மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் வர வாய்ப்பில்லை. ஏனென்றால், அங்கே காவிரி நீர் முழுவதும் குறுகிய மலைப்பகுதிக்குள் வருகிறது. அத்தகைய இடத்தில் அணை கட்டப்பட்டு விட்டால் பெரிய தடுப்பு போட்டதுபோல் அமைந்துவிடும்.

சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தேவையான நீரை தருவோம் என்று கர்நாடக அரசு கூறினாலும் அணையை கட்டி முடித்துவிட்டால் ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடகம் தராது.

பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த பின்பு, தண்ணீர் இருந்தால் திறந்து விடுகிறோம் என்று எஜமான தோரணைக்கு கர்நாடகா மாறிவிடும். பிறகு தமிழக அரசு மீண்டும் மீண்டும் சுப்ரீம் கோர்ட் படிகளைத்தான் ஏற வேண்டியிருக்கும். எனவே இதை ஆரம்ப நிலையிலேயே முறியடிக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தின் 22 மாவட்டங்களில் குடிநீர் வழங்க, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 5.5 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டப்பட்டு விட்டால் இந்த குடிநீர் திட்டங்களும் அடியோடு பாதிக்கும்.

முந்தைய அரசு கூட பரவாயில்லை

இதுபோன்ற துல்லியமான புள்ளி விவரங்கள் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஏராளம் உள்ளது. கடந்த 12-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஒருவருக்கு கூட அழைப்பு வரவில்லை.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்களையும் அழைத்து, கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதுதான், கடந்த கால நடைமுறையாக இருந்தது. 2018-ல் காவிரி பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியதும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக விவாதிக்க, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியபோது, காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைத்திருந்தார்.

கடந்த 1991ல், காவிரி நடுவர் நீதி மன்றம் அமைக்கப்பட்ட பின், 1992-ல், இப்பிரச்னையை எப்படி எடுத்துச் செல்வது என்பதில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குழப்பம் இருந்தது. உடனே, கரூரில் இருந்த காவிரி பாதுகாப்பு குழு தலைவரும், வக்கீலுமான பி.ஆர்.குப்புசாமியை, தன் போயஸ் தோட்ட இல்லத்துக்கே வரவழைத்து பேசினார். சுமார்
3 மணி நேரம், எல்லா தகவல்களையும் அவர் கேட்டறிந்தார். அதன் பிறகே இந்த பிரச்னையை சட்ட ரீதியாக அணுக தமிழக அரசு முடிவு செய்தது.

அன்று ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டத்தால்தான் இன்றைக்கு தமிழகத்துக்கு
காவிரி பிரச்னையில் நியாயம் கிடைத்திருக்கிறது. தற்போது, தமிழகத்துக்கு அநீதி இழைக்க, கர்நாடக மாநில அரசு, விவசாயிகளோடு கைகோர்த்து செயல்படும்போது, நியாயத்துக்காக போராடும் தமிழக அரசு மட்டும், தமிழக விவசாயிகளை புறக்கணிப்பது ஏன் என்று தெரியவில்லை.

சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காதபோதே இதைச் சுட்டிக் காட்டினோம். ஆனால் இப்போதும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் யாரையும் டெல்லிக்கு அழைத்து போகவில்லை. காவிரி ஆற்றில் நீர் வரவில்லை என்றால் முதல் பாதிப்பு விவசாயிகளுக்குத்தான். ஆனால் அவர்களுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் கொடுப்பதுபோல் தெரியவில்லை. இதனால் டெல்டா பகுதி மக்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.

நெல் கொள்முதல் பிரச்சனைக்கும் எட்டாத தீர்வு

ஏற்கனவே, தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் உடனடியாக விற்க முடியாமல் பரிதவித்து வருகிறோம். மூட்டைக்கு 30 ரூபாய் 40 ரூபாய் கமிஷன் கொடுத்தால்தான் வேலையே நடக்கிறது. இது தென் மேற்கு பருவ மழைக்காலம் என்பதால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது நெல்மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாழாகி விடுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளை தமிழக அரசிடம் நேரடியாக கொண்டு செல்வதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினோம். சரி டெல்லிக்கு செல்லும்போது அழைப்பு விடுத்தாலாவது எங்களுடைய பிரச்சினைகளை கூறலாம் என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்கான கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற முக்கியமான கூட்டங்கள், சந்திப்புகளின்போது விவசாயிகள் இல்லாதது, உப்பிடாத உணவு பண்டத்துக்கு சமம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி இவர் சொன்னது உண்மை என்பதை நிரூபிப்பதுபோல் ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடந்துள்ளது.

அங்குள்ள வெள்ளாளவிடுதி என்னும் ஊரில் நெல் கொள்முதல் நிலையத்தை 30 நாட்களாக திறக்க விடாமல் தடுத்தது, மட்டுமின்றி மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கமிஷன் பெறுவதற்கு திமுக பிரமுகர் ஒருவர் முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுங்கட்சி பிரமுகர் மீது இந்தப் புகாரை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதை முன்னெடுத்தவர்கள் வேறு யாருமல்ல, திமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான்.

கடந்த 7 ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவரும் அந்த ஊரில் இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இதுதான் முதல் முறை என்று கூறுகின்றனர்.

விவசாயிகளுக்கு நடக்கும் இது போன்ற கொடுமைகளை எங்கே போய் சொல்வது?…

Views: - 163

0

0

Leave a Reply