மேகதாது அணை விவகாரம்… காங்கிரசை தைரியமாக திமுக எதிர்க்குமா…. ? பெங்களூருவில் எகிறும் எதிர்பார்ப்பு!

Author: Babu Lakshmanan
13 July 2023, 9:12 pm
Quick Share

பெங்களூருவில் வருகிற 17, 18-ம் தேதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல்ஸ்சை
பல மடங்கு எகிற வைத்தும் இருக்கிறது.

இதற்கு காரணம் கடந்த மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில்
அம்மாநிலத்தின் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் நடந்த முதலாவது எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான எந்த வியூகங்களும் வகுக்கப்படவில்லை. தவிர அந்தக் கூட்டத்தில்15 எதிர்க்கட்சிகளே பங்கேற்றன.

இதைத்தொடர்ந்து அடுத்த கூட்டம் ஜூலை மாதம் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெறும், அந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் என்று திடீரென இடமாற்றம் நடந்தது.

ஒருவேளை மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலம் என்பதால் கர்நாடகாவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கலாம். அதேநேரம் முதல் கூட்டம் போல் இல்லாமல், இம்முறை இரண்டு நாட்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உள்ள நிலையில்
15 கட்சிகள் மட்டுமே பங்கேற்றதால் இந்த முறை தமிழகத்தில் இருந்து மட்டும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் ராஷ்டிரிய சோசலிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜோசப் அணியின் கேரள காங்கிரஸ், மாணி பிரிவின் கேரள காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்கும் கட்சிகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

முதல்நாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சிறப்பு விருந்துடன் கூடிய ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. பெங்களூரு கூட்டத்தில் ராகுல் காந்தி தவிர அவருடைய தாயாரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தின்போது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மராட்டியத்தில் வலிமையானதொரு எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் அடுத்த பத்து நாட்களில் அந்த மாநிலத்தின் அரசியல் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போய்விட்டது.

அஜித் பவார் தலைமையில் 40க்கும் மேற்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி, பாஜக ஆகியவற்றுடன் இணைந்து அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் ஆகிவிட்டார்.

இதனால் 82 வயதாகும் சரத் பவாரால் தேசியவாத காங்கிரசை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியுமா என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதன் காரணமாக பெங்களூரு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அவருடைய கட்சிக்கு எந்த மாதிரியான மரியாதை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

ஏனென்றால் காங்கிரஸ் தலைமையில்தான் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தவேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உரக்க கூறி வருபவர் சரத்பவார் மட்டுமே.

இன்னொரு பக்கம், டெல்லி நிர்வாகம் தொடர்பாக மத்திய பாஜக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தில் தனது நிலைப்பாட்டை பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாகவே காங்கிரஸ் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் பெங்களூரு கூட்டத்தை நாங்கள் புறக்கணிப்போம் என்று டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி பகிரங்கமாகவே மிரட்டி வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடப்பது திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி விட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஏனென்றால் சமீபத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா, தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டிலேயே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது பற்றிய விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததுதான்.

மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெங்களூரு நகர மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சாருமான
டி கே சிவகுமார் தேர்தல் வாக்குறுதியும் அளித்திருந்தார்.

கர்நாடக அரசின் பட்ஜெட் உரையில் மேகதாது அணை பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் உடனடியாக எதிர்வினை ஆற்றவில்லை.

இதற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை மட்டும் சற்று கடுமையாக இருந்தது.”காங்கிரசையோ அல்லது சிவகுமாரையோ கண்டிக்கும் இதயம் நமது முதலமைச்சருக்கு இல்லை. ஆனால் தேசிய அளவில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளார்.

ஸ்டாலினுக்கு பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உரிமை உண்டு, ஆனால் அவர் தமிழகம் திரும்பியதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கோ பேக் ஸ்டாலின் போராட்டத்திற்கு நான் தலைமை தாங்குவேன்” என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதுபோலவே விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர்.

“எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் வெளிப்படையாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க முடியாது என்பது தெரிந்த விஷயம்தான். இருந்தாலும், தனிப்பட்ட முறையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் இருவரையும் சந்தித்து பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். எனவே அதை முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ மூவரும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

“ஏனென்றால் இதை விட அருமையானதொரு சந்தர்ப்பம் இனி ஒருபோதும் அமையாது. மத்திய அரசு மூலம் மேகதாது அணை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பதை விட இந்த சந்திப்பு சிறந்த பயனைத் தரும்.

ஆனால் நாங்கள் இங்கே எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குத்தான் வந்திருக்கிறோம். எங்களுடைய எண்ணமெல்லாம் 2024 தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றாகத் திரண்டு பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதுதான். அதனால் தேசிய அளவில் உள்ள
ஒரு பிரச்சினைக்காக நாங்கள் கூடும்போது அங்கு இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையை எழுப்புவது சரியான செயல் அல்ல என்று கூறக்கூடாது.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாதமாக இருந்தாலும் கூட மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு மிக தீவிரமாகவும் உறுதியாகவும் இருப்பதை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஏனென்றால் இப்பிரச்சனையால் கேரளாவுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதை தென் மாநிலங்களின் ஒட்டு மொத்த பிரச்சனையாக அணுகவேண்டும்.

மேலும் தங்களது மாநிலத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றவர்கள் கலந்து கொள்வதை தங்களுக்கு கிடைக்கும் கிரீன் சிக்னலாக கர்நாடக காங்கிரஸ் அரசு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

இதனால் தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கருதி இப்பிரச்சனையை முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பாமல் விட்டுவிடவும் கூடாது.

ஆகையால் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான கெஜ்ரிவால் போல வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காகவும், டெல்டா பாசன விவசாயிகளுக்காகவும் பெங்களூருவில் குரல் எழுப்ப வேண்டும். இல்லையென்றால் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட விட மாட்டோம் என்று பொங்குவதெல்லாம் வெறும் நடிப்புதான். அரசியல் லாபம் கருதி இரட்டை வேடம் போடுகின்றன என்றுதான் தமிழக மக்கள் கருதும் நிலை ஏற்படும்.

தவிர பாட்னா கூட்டத்திற்கு பிறகு அனைத்து கட்சி தலைவர்களும் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் அவசரமாக சென்னை விமானத்தை பிடிப்பதற்காக உடனே கிளம்பி வந்துவிட்டேன் என்பது போன்ற காரணத்தை பெங்களூரு கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் கூறக் கூடாது. ஏனென்றால் பெங்களூருவில் இருந்து காரில் வந்தால் ஐந்தரை மணி நேரத்திற்குள் சென்னை திரும்பி விட முடியும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தின்போது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் துணிச்சலுடன் மேகதாது அணை விவகாரத்தை கிளப்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 229

0

0