எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள்: அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது..!!
17 January 2021, 8:24 amசென்னை: மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் இன்று அரசு சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் கொண்டாடப்படுகிறது.
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் காலை 11 மணியளவில் சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.
இதேபோன்று சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் அரசியல் கட்சி தலைவர்களால் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. எம்.ஜி.ஆர்.வாழ்ந்து, மறைந்த சென்னை ராமாவரம் தோட்டத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.
0
0