நிர்வாகமே சரியில்ல.. கடுமையான நிதி இழப்பில் ஆவின்… பால்வளத்துறை அமைச்சர் நாசரை நீக்குங்க… தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 3:58 pm
minister nasar -updatenews360
Quick Share

சென்னை ; ஆவின் நிர்வாகம் தொடர்ந்து நிதியிழப்பை சந்தித்து வருவதாகவும், அமைச்சர் நாசரிடம் இருந்து பால்வளத்துறையை பறிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில்‌ 2019ம்‌ ஆண்டுக்குப்‌ பிறகு பால்‌ கொள்முதல்‌ விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்காததால்‌ ஆவினுக்கான பால்‌ வரத்து கடுமையாக குறைந்து கடந்த 2021ம்‌ ஆண்டு அக்டோபர்‌ மாத நிலவரப்படி நாளொன்றுக்கு சுமார்‌ 36.76லட்சம்‌ லிட்டராக இருந்த பால்‌ கொள்முதல்‌ நடப்பாண்டு அக்டோபர்‌ மாதம்‌ 27ம்‌ தேதி நிலவரப்படி 32.44 லட்சம்‌ லிட்டராகி நாளொன்றுக்கு சுமார்‌ 4. 32 லட்சம்‌ லிட்டர்‌ கொள்முதல்‌ குறைந்திருந்தது.

அதனைத்‌ தொடர்ந்து பால்‌ உற்பத்தியாளர்களின்‌ நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி கடந்த நவம்பர்‌ 5ம்‌ தேதி முதல்‌ பால்‌ கொள்முதல்‌ விலையை லிட்டருக்கு வெறும்‌ 3.00ரூபாய்‌ மட்டும்‌ உயர்த்தி வழங்க உத்தரவிட்டதால்‌ பால்‌ உற்பத்தியாளர்கள்‌ தரப்பில்‌ இருந்து லிட்டருக்கு குறைந்தபட்சம்‌ 10.00 ரூபாயாவது உயர்த்தி வழங்கப்படும்‌ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்‌ யானைப்‌ பசிக்கு சோளப்பொறியை உணவாக கொடுத்தது போன்ற கொள்முதல்‌ விலை
உயர்வு அவர்களை கடும்‌ அதிர்ச்சியடைச்‌ செய்தது.

இந்த நிலையில்‌ கடந்த வாரம்‌ 14ம்‌ தேதி நடைபெற்ற ஆவின்‌ நிறுவனத்தின்‌ General Review Meeting-ல்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள 27 ஒன்றியங்களில்‌ பால்‌ கொள்முதல்‌ வரத்து மேலும்‌ குறைந்திருப்பது தமிழக அரசு மீது பால்‌ உற்பத்தியாளர்கள்‌ தரப்பில்‌ கோபத்தை ஏற்படுத்தியிருப்பதும்‌, அதன்‌ காரணமாகவே பால்‌ கொள்முதல்‌ விலை உயர்த்தி வழங்கப்பட்ட பின்பும்‌ கூட ஆவினுக்கான பால்‌ வரத்து அதிகரிக்காமல்‌ கடந்த அக்டோபர்‌ மாதத்தோடு ஒப்பிடுகையில்,‌ மேலும்‌ 1 லட்சம்‌ லிட்டர்‌ வரை பால்‌ வரத்து குறைந்திருப்பதும்‌ அந்த கூட்டத்தின்‌ வாயிலாக தெள்ளத்‌ தெளிவாக தெரிய வருகிறது.

ஏற்கனவே, ஆரஞ்சு நிற பாக்கெட்டான ஆவின்‌ நிறைகொழுப்பு பால்‌, சிவப்பு நிற பாக்கெட்டான டீமேட்‌ பாலின்‌ விற்பனை விலையை வரலாறு காணாத வகையில்‌ உயர்த்தியதால்‌ அவற்றின்‌ விற்பனை அளவு குறையத்‌ தொடங்கிய நிலையில்,‌ தற்போது பால்‌ கொள்முதலும்‌ குறையத்‌ தொடங்கியிருப்பது ஆவினின்‌ வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதையும்‌, தனியார்‌ பால்‌ நிறுவனங்களுக்கு சாதகமாகவே அது அமையும்‌ என்பதையும்‌ தமிழக அரசு கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின்‌ பால்‌ விற்பனை விலை லிட்டருக்கு 3.00 ரூபாய்‌ குறைத்ததாலும்‌, தற்போது நிறைகொழுப்பு பாலுக்கான விற்பனை விலையை மட்டும்‌ உயர்த்தி, பிற வகை பாலுக்கான விற்பனை விலையை உயர்த்தாமல்‌ கொள்முதல்‌ விலையை லிட்டருக்கு 3.00 ரூபாய்‌ உயர்த்தி வழங்கியதாலும்‌ ஆவினில்‌ பணியாற்றும்‌ ஊழியர்களுக்கு சம்பளம்‌ கூட வழங்க முடியாத நிலையில்‌ தற்போது கடுமையான நிதியிழப்பில்‌ ஆவின்‌ நிர்வாகம்‌ தத்தளிப்பதாக கூறப்படுகிறது.

உண்மையை சொல்லப்‌ போனால்‌ கடந்த ஆண்டு பால்‌ விற்பனை விலையை லிட்டருக்கு 3.00 ரூபாய்‌ குறைத்ததாலோ, தற்போது கொள்முதல்‌ விலை லிட்டருக்கு 3.00 ரூபாய்‌ உயர்த்தப்பட்டதாலோ ஆவினுக்கு நிதியிழப்பு இல்லை. மாறாக ஆவினில்‌ 17 மாவட்ட ஒன்றியங்களாக இருந்ததை கடந்த அதிமுக ஆட்சியில்‌ பிரித்து 25 ஒன்றியங்களாக அதிகரித்ததும்‌, தற்போதைய திமுக ஆட்சியில்‌ அதனை மேலும்‌ பிரித்து 27 ஒன்றியங்களாக அதிகரித்ததாலும்‌ ஏற்பட்ட கூடுதல்‌ நிர்வாக செலவினங்களாலும்‌, கடந்த ஆட்சியில்‌ நடைபெற்ற தகுதியற்ற பணி நியமனங்களாலும்‌, தேவையற்ற இயந்திர தளவாடங்கள்‌ கொள்முதலாலும்‌ தான்‌ தற்போது ஆவின்‌ மிகுந்த நிதி நெருக்கடியில்‌ சிக்கி தவிக்க காரணமாக அமைந்துள்ளது.

ஆவினில்‌ பால்‌ கொள்முதலையும்‌, விற்பனையையும்‌ அதிகரிக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல்‌, ஆவின்‌ நிறுவனம்‌ எந்த குறிக்கோளோடு தொடங்கப்பட்டதோ அதனை தற்போது அதிலிருந்து தடம்‌ மாறி பயணிக்க ஏசி அறையில்‌ அமர்ந்து கொண்டு இனிப்பு, கார வகைகள்‌, கேக்‌ என ஆவினை திசைமாற்றி கொண்டு செல்லும்‌ பால்வளத்துறை அமைச்சர்‌ திரு. சா.மு.நாசர்‌ அவர்களின்‌ செயல்பாடுகள்‌ ஆவினுக்கு கூடுதல்‌ நிதியிழப்பை ஏற்படுத்தவே வழிவகுக்கும்‌.

எனவே ஆவின்‌ இருக்கும்‌ தற்போதைய சூழலில்‌ ஆவினை மீட்டெடுக்க வேண்டுமானால்‌ பால்வளத்துறையின்‌ அமைச்சர்‌ பொறுப்பை தமிழக நிதியமைச்சராக இருக்கும்‌ திரு. பி.டி.ஆர்‌.பழனிவேல்ராஜன்‌ அவர்களிடம்‌ கூடுதல்‌ பொறுப்பாக ஒப்படைத்தால்‌, ஒருவேளை தற்போதைய சூழலில்‌ இருந்து ஆவின்‌ மீண்டு வர வாய்ப்புள்ளது. இல்லையெனில்‌ பால்‌ உற்பத்தியாளர்கள்‌ மற்றும்‌ பால்‌ முகவர்களின்‌ உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்‌ போல வீணாகிப்‌ போகும்‌ என்பதையும்‌ தமிழக முதல்வர்‌ அவர்கள்‌ எண்ணிப்‌ பார்க்க வேண்டும்‌.

மேலும்‌ ஏற்கனவே எங்களது சங்கம்‌ உருவான காலந்தொட்டு சுமார்‌ 14 ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது போன்று தனியார்‌ மற்றும்‌ அரசு நிறுவனங்கள்‌ இயக்கும்‌ பொது போக்குவரத்திற்கான கட்டணத்தை அரசு ஒரே மாதிரி நிர்ணயிப்பது போன்று, தனியார்‌ நிறுவனங்களின்‌ பால்‌ கொள்முதல்‌ மற்றும்‌ விற்பனை விலையையும்‌ அரசே நிர்ணயம்‌ செய்யக்‌ கூடிய வகையில்‌ சட்டமியற்ற வேண்டும்‌, மத்திய அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ளதாக கூறப்படும்‌ தனியார்‌ பால்‌ நிறுவனங்களை கட்டுப்படுத்தும்‌ அதிகாரத்தை மாநில அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்கிற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்‌ என தேசிய பால்‌ தின கோரிக்கையாக மீண்டும்‌, மீண்டும்‌ வலியுறுத்தி கேட்டுக்‌ கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 355

0

0