அமித்ஷா டெல்லி திரும்பியதும் திமுகவிற்கு ‘ஸ்கெட்ச்’ : நெருக்கடியில் முக ஸ்டாலின்..!!

21 November 2020, 9:46 pm
Bjp - dmk - cover - updatenews360
Quick Share

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்து சென்ற பின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மகளிர் அணித்தலைவி கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் விரைவுபடுத்தப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சில வழக்குகளில் தீர்ப்பு வரக்கூடும் என்றும், வழக்குகளின் விசாரணை பற்றிய செய்திகள் தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலிக்கும் என்பதால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவு தகர்க்கப்படும் என்ற திகிலில் அந்தக் கட்சியின் தலைவர்கள் இருக்கின்றனர்.

தமிழகம் வந்த அமித்ஷா பாஜகவுக்கு வலுவான கூட்டணியை அமைப்பதுடன் எதிரணியான திமுகவின் அதிரடித் தாக்குதல் தொடுத்து தேர்தல் நேரத்தில் அதை வலுவிழக்கச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் முக்கிய தலைவர்களின் மீதான ஊழல் வழக்குகளை அவர் விரைவுபடுத்தினால், ஊழல் கட்சியைப் பதவியில் அமர்த்த வேண்டுமா..? என்று மக்கள் தீவிரமாக யோசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

anna arivalayam- updatenews360

ஏற்கனவே, திமுக எம்.பி கனிமொழி, மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் மீது மீண்டும் 2-ஜி வழக்கின் விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ள சிபிஐ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் இந்த வழக்கில் விரைவில் சேர்க்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார நேரத்தில் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்பதால், ஸ்டாலினுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கடந்த 2008-ல் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளைப் பின்பற்றாததால், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தெரிவித்தது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 2ஜி ஊழல் வழக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது. மக்கள் மத்தியில் திமுக மீதி கடும் மக்களின் கடும் கோபத்தை ஏற்படுத்தி அக்கட்சி படுதோல்வி அடைவதற்கு 2ஜி ஊழல் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது. இவ்வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்ததால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களே இருக்கும் சூழலில் அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின்தான் திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதால், 2-ஜி வழக்கு திமுகவைப் பாதிக்காது என்று திமுகவினர் கூறிவருகிறார்கள். ஆனால், விரைவில் ஸ்டாலினையும் இந்த வழக்கில் சேர்க்க சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நடவடிக்கை அமித்ஷா டெல்லி திரும்பியதும் வேகமெடுக்கும் என்று தெரிகிறது.

Amit_Shah_UpdateNews360

ஸ்வான் எனப்படும் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளர் சாகித் பால்வா சென்னைக்கு வந்த ஸ்டாலினின் வீட்டில் அவரை சந்தித்தார். இவருக்கு சொந்தமான பிபி ரியாலிட்டி என்ற நிறுவனம் ரூ. 200 கோடியை கலைஞர் டிவிக்கு 2009-ஆம் ஆண்டு அளித்தது. 2ஜி அலைவரிசைகளை ராசா வழங்கியதற்காகவே இந்த ரூ. 200 கோடியை கலைஞர் டிவிக்கு சாகித் பால்வா கொடுத்ததாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. சாகித் பால்வாவும் ஸ்டாலினும் சந்தித்தது குறித்து 2ஜி வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சாதிக் பாட்ஷா தனது வாக்குமூலத்தில் அமலாக்கத்துறையிடம் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ஸ்டாலினும் 2ஜி வழக்கு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

2021 தேர்தலின்போது வழக்கின் வாதங்களும் அதைப்பற்றிய செய்திகளும் பிரச்சாரத்தில் எதிரொலிக்கும்போது திமுக முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் பெரிதும் பேசப்படும், இது திமுகவுக்கு மிகவும் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போல மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான அலை வீச வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கும் அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ. 89 கோடி மதிப்பினிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது ஏற்கெனவே திமுக முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீதும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பணத்தால் அவர் மீது வாக்குகளைப் பெறுவதற்குப் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக வழக்கு நடந்துவருகிறது. திமுக துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடியின் மகனும், எம்பியுமான கௌதம சிகாமணி மீதும் வருமான வரித்துறை வழக்கு நடைபெற்று வருகிறது. 2021 தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கும் என்று தெரிகிறது. இதனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததுபோன்ற நிலை மீண்டும் ஏற்படுமோ என்று திமுகவினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Views: - 23

0

0