ஆசிரியர் பணியிட மாறுதல் பெற அமைச்சருக்கு லஞ்சம்? வைரலாகி வரும் திமுக பிரமுகரின் வீடியோவால் சர்ச்சை!!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2022, 5:39 pm
தேனி அருகே வடபுதுபட்டியைச் சேர்ந்தவர் திமுக தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன். இவர் அரசுப் பணியிடம் மாறுதல் பெற வேண்டும் என்றால், அமைச்சர் அலுவலகத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கு முன்பணமாக 3 லட்ச ரூபாயும், இரண்டு லட்சத்தை காசோலையாக வழங்க வேண்டும் எனவும், பணியிட மாறுதலுக்கான ஆணை கிடைத்ததும், காசோலையை வங்கியில் செலுத்தி பணமாக மாற்றிக்கொள்வதாக ஒருவரிடம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில், அரசுப் பணியிடம் மாறுதல் பெறுவதற்கு இதைவிட வேறு எவரும் குறைவாக பணம் வாங்குவதில்லை. இது போன்று பத்து நபர்களின் பணியிட மாறுதலுக்காக அமைச்சா் அலுவலகத்திற்கு 30 லட்சம் ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். நம்பிக்கையுடன் வந்தால் மட்டுமே இந்த வேலைகளை செய்து தர முடியும் என பேரம் பேசுகிறார்.
இதனிடையே தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மூவேந்தர் முன்னேற்ற கழக கட்சியை சேர்ந்த ஜெயகாளை என்பவர் மீது திமுக தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஜெயகாளை என்பவர், ஒரு வீடியோ எடுத்து அதில் நான் பேசும் குரல்களை டப்பிங் எடிட்டிங் செய்து என்னை மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார் . இந்தப் பொய்யான வீடியோவை சோசியல் மீடியாக்களில் போட்டுள்ளார்.
அதேபோல் ஒரு பெண் குரல் போல் பேசி வேலை வாங்கித் தருவதாக சொல்லி நான் அந்தப் பெண்ணிடம் பணத்தை பெற்றுக் கொண்டதாக ஒரு ஆடியோ ரெக்கார்டிங் தயார் செய்துள்ளார். அந்த ஆடியோவை என் வாட்ஸ்-அப் நம்பருக்கு போட்டு என்னிடம் 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்.
அதேபோல் நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் தேனி நகர் மன்ற தலைவருக்கு போட்டியிடும் உங்களை குறித்து வீடியோ, ஆடியோக்களை போட்டு உங்கள் பெயரை அசிங்கப்படுத்திவேன் என்று என்னை பயமுறுத்துகிறார் .
எனவே என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும், இவரை போன்ற நபர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா பாலமுருகன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வடபுதுபட்டி ஊராட்சிமன்ற தலைவராக உள்ளார். தேனி நகராட்சித் தலைவராக வேண்டும் என்ற இலக்குடன் சூர்யா பாலமுருகன் இயங்கி வந்தார்.
தேனி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் வடபுதுபட்டியும் ஒன்று அப்போதே மு.க.ஸ்டாலினிடம் மனதில் இடம் பெற வேண்டும் என பெரும் செலவு செய்து தனது அரசியல் பலத்தை காட்டியவர். இந்நிலையில் இவர் பணியிடமாறுதல் பணம் கேட்பதாக வெளியாகியுள்ள விடியோ தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜெயகாளை நான் தேனி மாவட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக செயலாளராக உள்ளேன். மூவேந்தர் புயல் மீடியா நடத்தி வருகிறேன். சூர்யா பாலமுருகன் பேசிய விடியோ பதிவு உண்மையானது. பாதிக்கப்பட்ட நபர் வீடியோ பதிவு செய்து என்னிடம் ஒப்படைத்தார்.
நான் என்னுடைய யூடியூப் சேனலில் அதை வெளியிட்டேன். வேறு மீடியாக்களிடமும் அவர் கொடுத்துள்ளார். ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு திருவண்ணாமலையில் இருந்து தேனிக்கு ஒரு ஆசிரியை மாறுதல் கேட்டார்.
இடமாறுதலுக்காக சூர்யா பாலமுருகனிடம் பேசியவர் அரண்மனைப்புதூரைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் நபர் ஆவார். பாலமுருகன் இடமாறுதல் மட்டுமில்லாது அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
இதையும் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட எஸ்பியிடும் புகார் அளிக்க உள்ளதாகவும், பாலமுருகன் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
சூர்யா பாலமுருகன் தேனி நகர பொறுப்பாளராக இருக்கும் போதே, வெளிப்படையாக ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு இவ்வாறு பணம் கேட்டு வருகிறார். இதில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தான் விசாரிக்க வேண்டும். எனவே அவருக்கும் அனைத்து ஆதாரங்களுடன் மனு அனுப்பியுள்ளேன் என்றார்.
ஒரு பக்கம் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாரி வாரி வழங்கி வரும் அரசு, மறுப்பக்கம் அதை லஞ்சமாக பெற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், உண்மையை கண்டுபிடித்து தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
0
0